Tamilnadu Cricket Team vs Mumbai 2nd Semi Final Ranji Trophy 2023 - 24: 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
கால் இறுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், கர்நாடகாவை வீழ்த்திய விதர்பா அணியும், பரோடாவை வீழ்த்திய மும்பையும், சவுராஷ்டிராவை வீழ்த்திய தமிழ்நாடும் மற்றும் ஆந்திராவை வீழ்த்திய மத்திய பிரதேச அணியும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
இந்த நிலையில், வருகிற சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (மார்ச் 02 - 06) நடைபெற உள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் விதர்பா - மத்திய பிரதேசம் அணிகள் மோத உள்ளன. இதேபோல், 2வது அரையிறுதிப் போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதுகின்றன.
மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதல்
சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி அதன் அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பையை எதிர்கொள்ள உள்ளது. மும்பை அணியில் இந்திய அணியில் ரெகுலராக விளையாடிய அனுபவம் வாய்ந்த ரஹானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
பரோடா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த ஜூனியர் இந்திய அணி வீரர் முஷீர் கான் (203 ரன்) தரமான ஃபார்மில் உள்ளார். அந்தப் போட்டியில் சதம் அடித்த தொடக்க வீரர் ஹர்திக் தாமோர் 114 ரன்கள் எடுத்தார் அசத்தலாக உள்ளார். கடைசி விக்கெட்டுக்கு 233 ரன்கள் குவித்த தனுஷ் கோட்டியன் - துஷார் தேஷ்பாண்டே ஜோடி சதம் விளாசி சிறப்பாக இருந்தனர். ஷம்ஸ் முலானியுடன் பந்துவீச்சில் இவர்கள் சிறப்பாக இருந்தனர். மும்பை அணிக்கு புதிய வருகையாக இணையும் ஷ்ரேயாஸ் ஐயரால் அணி கூடுதல் பலம் பெறும்.
மறுபுறம், கோயம்புத்தூரில் சவுராஷ்டிராவுக்கு எதிராக நடந்த காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணியினர் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பேட்டிங்கில் என் ஜெகதீசன், பிரதோஷ் பால், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், எம் முகமது, பூபதி குமார், எஸ் அஜித் ராம், விமல் குமார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பவுலிங்கில் சந்தீப் வாரியர், முகமது அலி, அஜித் ராம் போன்ற வீரர்களும் துல்லியமாக பந்துவீசி அசத்தி வருகிறார்கள். அதேவேளையில், கேப்டன் சாய் கிஷோர் ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார்.
1934ம் ஆண்டு தொடங்கி 90 ஆண்டுகளை கடந்து நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி கோப்பைத் தொடரில் தமிழக அணி 2 முறை (1954–55, 1987–88) வென்றுள்ளது. 10 முறை (1935–36, 1940–41, 1967–68, 1972–73, 1991–92, 1995–96, 2002–03, 2003–04, 2011–12, 2014–15) இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியுற்றுள்ளது. அதேநேரத்தில், 41 முறை கோப்பை வென்ற சாம்பியனாக மும்பை அணி வலம் வருகிறது. தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, 36 ஆண்டுகால ரஞ்சி கோப்பை தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? தமிழ்நாடு அணி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“