6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதுகின்றன.
உலககோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நடத்தப்பட்டு வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளனர். இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்
அதன்படி கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி தொடங்கப்பட்ட ஆசியகோப்பை தொடரின் குருப் சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி இன்று முதல் சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
குருப் சுற்றில் நேபாளம் அணிக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி அதிக ரன் ரேட் பெற்றது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டி முடிவில்லாமல் போனாலும் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த வங்தேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இன்று தொடங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில், தொடக்க ஆட்டக்காரர் மெஹந்தி ஹசன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்த வந்த லிட்டன் தான் 16 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் 20 ரன்களுக்கும் ஹார்டி 2 ரன்களுக்கும் வெளியேறினர்.
இதனால் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த வங்தேச அணிக்கு 5-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் சாஹிப் அல் ஹசன் – முஷ்பிகூர் ரஹீம் ஜோடி ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினர்.
கேப்டன் சகீப் அல் ஹசன் 53 ரன்களையும், முஷ்பிகூர் ரஹிம் 64 ரன்களையும் குவித்து அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார்கள்.
இதனால், வங்கதேசம் அணி 38.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுல்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக் பேட்டிங் செய்தனர்.
ஃபகார் ஜமான் 20 ரன் எடுத்திருந்தபோது, வங்க தேச பந்து வீச்சாளர் ஷொரிஃபுல் இஸ்லாம் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இவரை அடுத்து, பாபர் ஆசம் பேட்டி செய்ய வந்தார். 17 ரன் எடுத்திருந்த பாபர் ஆசம் தஷ்கின் அஹமது பந்தில் போல்ட் அவுட் ஆனார். இவரை அடுத்து, மொஹமது ரிஸ்வான் பேட்டிங் செய்ய வந்தார்.
இமாம் உல் ஹக் - மொஹமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடினார்கள். இமாம் உல் ஹக் 84 பந்துகளில் 74 ரன் எடுத்திருந்தபோது, மெஹிந்தி ஹசன் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இவரை அடுத்து வந்த சல்மான் அலி அகா மொஹமது ரிஸ்வான் உடன் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.
பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன் எடுத்து பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.