IPL CSK Team 2022 Players List: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை காட்டிலும் ஐபிஎல் தொடரில் விளையாட உலகின் பல்வேறு நாட்டு வீரர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 14-சீசன்கள் முடிந்துள்ளது. இதில் சென்னை அணி 4 முறையும் மும்பை அணி 5 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
குறிப்பாக கடந்த 2020- சீசனை தவிர தான் பங்கேற்ற அனைத்து சீசகளிலும் சென்னை அணி ப்ளேஅப் சுற்றுக்கு சென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ப்ளேஅப் மற்றும் அதிகமுறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையே சாரும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஏறக்குறைய அனைத்து அணிகளும் கேப்டனை மாற்றிவிட்ட நிலையில், 2008-ம் ஆண்டு சீசனில் இருந்து தற்போது வரை சென்னை அணியின் கேப்டன் தோனி மட்டுமே.
சென்னை அணி ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த தோனி ஒரு முக்கிய காரணம் என்றாலும், அவர் தேர்வு செய்யும் டீம் மற்றொரு காரணம். அனுபவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து சிறப்பாக செயல்பட வைப்பதும் சென்னை அணியின் தனித்தன்மை. மேலும் எவ்வளவு பெரிய தோல்வி கிடைத்தாலும வெற்றி கொடுத்த அணியில் மாற்றம் செய்ய தோனி முன்வரமாட்டார்.
இதன் காரணமாக எத்தனை முறை வீரர்கள் மெகா ஏலம் நடந்தாலும், சென்னை அணியின் ஒரு சில வீரர்களை சென்னை அணி நிர்வாகம் மற்ற அணிகளுக்கு வி்ட்டுக்கொடுப்பதில்லை. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு ஒரு காரணம், அவர்கள் தங்கள் முக்கிய வீரர்களை நம்பியதே ஆகும். பல ஆண்டுகளாக ஒரு முக்கிய அணியை தக்கவைத்துக்கொள்வது சென்னை அணியின் சிறப்பு.
இந்நிலையில், 15-வது ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் பெங்களூரில் நேற்று (பிப்ரவரி 12) தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் குஜராத் மற்றும் லக்னோ என இரண்டு புதிய அணிகள் களமிறங்குகிறது. ஆனாலும் சென்னை அணி அடுத்த 3 சீசன்களுக்கும் கேப்டன் தோனியை தக்கவைத்துள்ளது. தோனியைத் தவிர (ரூ. 12 கோடி), சிஎஸ்கே வெற்றிக்காக முக்கியப் பங்கு வகித்த ஆல்-ரவுண்டர் இரட்டையர்களான ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகியோரை அந்த அணி தக்கவைத்துள்ளது. மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக 2022-ஐபிஎல் தொடரை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 15-வது சீசனில் மெகா ஏலத்தில் சென்னை அணி நேற்று 6 வீரர்களை வாங்கியது. இதில் 5 வீரர்கள் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடியவர்கள்.
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த வீரர்கள் விவரம்:
ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, என் ஜெகதீசன், ஹரிகேஷ்பதி, நிஷாந்த், சுப்ரான்ஷுபதி சௌத்ரி, சிமர்ஜீத் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிரிட்டோரியஸ், டெவோன் கான்வே, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர்.
இதுவரை சிஎஸ்கே அணி
எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயாடு, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப்.
மீதமுள்ள பட்ஜெட்: 20.45 கோடி. வெளிநாட்டு வீரர்கள்: 2
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
தோனி (12 கோடி), ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி)
இதில் மிஸ்டர் ஐபிஎல் என்று வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னா தொடக்கத்தில் இருந்து சென்னை அணியில் விளையாடி வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னணியில் சுரேஷ் ரெய்னா சென்னை ரசிகர்களால் சின்னதல என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சென்னை அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் மிஸ்டர் ஐபிஎல் விற்கப்படாத வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
அதேபோல் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சென்னை அணியின் துறுப்புச்சீட்டாக இருந்த பாப் டூபிளசிஸ் தற்போது பெங்களூர் அணிக்கு சென்றுவிட்டார். அவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முயற்சி செய்தாலும், அவரின் விலை 4 கோடியை கடந்தவுடன் சென்னை அணி ஏலத்தில் இருந்து விலகிவிட்டது. அதேபோல் ஆல்ரவுண்டராக கலக்கிய ஷர்துல் தாகூரை சென்னை அணி நழுவ விட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். விக்கெட் தேவைப்படும்போது சரியாக நேரத்தில் விக்கெட் கைப்பற்றும் திறன்கொண்ட தாகூர் தற்போது டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
2020 ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசி பிரமிக்கவைத்த ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டிய தமிழகத்தில் ஷாருக்கான் ஆகியோரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி மேற்கொண்டு அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து இன்று நடைபெறும் 2-வது நாள் ஏலத்தில் சென்னை அணி யாரை ஏலத்தில் எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.