ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் மதீஷா பதிரானாவுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், கடந்த மே 29-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டை்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் மதீஷா பதிரானாவுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மலிங்காவின் சாயலில் பந்துவீசும் பதிரானா சென்னை அணியில் கேப்டன் தோனி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். குறிப்பாக டெத் ஓவர்களில் இவரின் ஏர்க்கர் பந்துவீச்சை பார்த்து கேப்டன் தோனி பலமுறை பாராட்டியுள்ளார்.
இந்த சீசனில் சென்னை அணிக்காக 12 போட்களில் 12 போட்டிகளில் விளையாடிய பதிரானா 19 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டில் 4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பதிரானவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட மலிங்கா அவரின் திறமையை அறிந்து வாய்ப்பு கொடுத்த கேப்டன் தோனிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்து வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பி வரும் நிலையில், சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நடக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 2-ந் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“