9-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புனேரி பால்டன் அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை தட்டிச்சென்றது.
9-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் ப்ளேஅப் மற்றும் சுற்றுகளின் முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. புரோ கபடி லீக் 9-வது சீசனின் இறுதிப்போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில், ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அவ்வப்போது அடித்து ஆடிய புனே அணி ஜெய்ப்பூருக்கு இணையாக புள்ளிகளை சேர்ந்ததால் போட்டியில் யாருக்கு வென்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
முதல் பாதி ஆட்டத்தில் 14-11 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணி முன்னிலை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2-வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஜெய்ப்பூர் அணி சார்பில், அர்ஜூன் தேஸ்வால், சுனில்குமார், அஜித்குமார் ஆகியோர் தலா 6 புள்ளிகள் சேர்த்தனர்.
புனேரி பால்டன் அணி சார்பில், ஆதித்யா ஷிண்டே 5 புள்ளிகளையும், ஆகாஷ் ஷிண்டே, அபினேஷ் நடராஜன், இஸ்மாயில் ஆகியோர் தலா 4 புள்ளிகள் சேர்த்தனர். 2014-ம் ஆண்டு தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்திய ஜெய்ப்பூர் அணி 2016-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து தற்போது 2022-ம் ஆண்டு மீண்டும் 2-வது முறையாக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil