India England 5th T20 Match : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் 4 டெஸ்ட் 5 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியஅணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தொடரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ராகுல் நீக்கப்பட்டு நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார். ராகுல் இல்லாததால் கேப்டன் விராட்கோலி ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கினார். இதில் கோலி ஒருபுறம் நிதானமாக ஆட முறுமனையில், அதிரடியான தொடக்கம் தந்த ரோகித் சர்மா சிக்சர் பவுண்டரி அடித்து ரன் கணக்கை உயர்த்தினார். இவர்களின் அதிரடியால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் திரட்டியது.
அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ரோகித் சர்மா 34 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். முதல்விக்கெட்டுக்கு கொலி ரோகித் ஜோடி 9 ஓவர்களில் 96 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய கடந்த போட்டியின் நாயகன் சூர்ய குமார் யாதவ், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை தொடரும வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 13.2 ஓவர்களில் 143 ரன்களை கடந்தபோது சூர்ய குமார் யாதவ் 17 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் குவித்து ரஷித்தின் அற்புதமான கேட்சில் வெளியேறினார். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.
இதற்கிடையெ நிதானமாக ஆடிய கேப்டன் விராட்கோலி அரைசதம் கடந்தார். மறுமனையில் ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரன்களை உயர்த்தினார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய கடைசி வரை களத்தில் இருந்த விராட்கோலி 52 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 80 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில், ஸ்டோக்ஸ், ரஷித் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 225 ரன்கள் வெற்றி இலக்குடன களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம அதிர்ச்சியாகஅமைந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் 2-வது பந்தில், ஜோசன் ராய் போல்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மிலன் தொடக்க ஆட்டகாரர் பட்லருடன் ஜோடி சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தார். இவர்களின் அதிரடியில் இங்கிலாந்து அணி மளமளவென ரன்கள் குவித்தது. இருவரும் ஒருவர் பின் ஒரவராக அரைசதம் கடந்த நிலையில், 13-வது ஓவரின் 5-வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். 34 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி 4 சிக்சருன் 52 ரன்கள் குவித்தார். பட்லர் - மிலன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 82 பந்துகளில் 136 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்ட்டோ மிலனுடன் ஜோடி சேர்ந்தார்.
14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து அணிக்கு 15வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஜானி போர்ஸ்டோவை வீழ்த்திய தாகூர் கடைசி பந்தில் டேவிட் மிலனை வீழ்த்தி அடி கொடுத்தார். இதில் போர்ஸ்டோ 7 ரன்களும், அரைசதம் கடந்த மிலன் 46 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 16-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கேப்டன் மார்கனை வெளியேற்றினார். இதனால் கடைசி 4 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது.
17-வது ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து 18-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் 6 ரன்களும், 19-வது ஓவரை வீசிய நடராஜன் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து கடைசி 6 பந்துகளில் 58 ரன்கள் தேவை என்ற நிலையில், சாம் கரன் சிக்சர், ஜோர்டான் 1 சிக்சர் அடித்த நிலையில், இங்கிலாந்து அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தரப்பில், தாகூர் 3 விக்கெட்டுகளும்,புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், பாண்டியா, நடராஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 23-ந் தேதி புனே மைதானத்தில் நடைபெறுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.