மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆடவர் அணிகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 14 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இம்மாதம் 31-ந் தேதி முதல் 15-வது சீசன் தொடங்க உள்ளது. இதனிடையே ஆடவர் அணியை போல் மகளிர் அணிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ தற்போது மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடங்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், யூபி வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலையில், 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் பீத் மூனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீராங்கனை யாஷ்டிகா பாட்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சேவியர் பர்நெட், ஹைலி மேத்யூசுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சேவியர் பர்நெட் 18 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய ஹைலி மேத்யூஸ் 31 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்த நிலையில், 30 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து வெளியேறினார்.
கடைசிகட்டத்தில் அதிரடியில் மிரட்டிய அமில்யா கெர், 24 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்களும், வொங் 1 பந்தில் 6 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். பூஜா வாஸ்ராக்கர் 8 பந்துகளில் 15 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 208 ரன்கள் என கடினமாக வெற்றி இலக்குடன களமிறங்கிய குஜராத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 15.1 ஓவர்களில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமடாக தயாளன் ஹேமலதா 29 ரன்களும், மோனிகா படேல் 10 ரன்கள் என இருவர் மட்டுமே இரட்டை இலக்கை எட்டினர்.
மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்த நிலையில், 4 வீராங்கனைகள் ரன்கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தனர். இதன் மூலம் மும்பை அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில், சாய்கா 4 விக்கெட்டுகளையும், பர்நெட், அமில்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/