/indian-express-tamil/media/media_files/2025/08/13/tamil-thalaivas-announce-captains-pkl-season-12-pawan-sehrawat-arjun-deshwal-tamil-news-2025-08-13-18-01-09.jpg)
12-வது புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் மற்றும் ஜெர்ஸி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
12 அணிகள் அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது.
முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் மற்றும் ஜெர்ஸி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் பவன் செராவத் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அதிரடி வீரர் அர்ஜுன் தேஷ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பால்யன் பேசுகையில், "பவன் ஒரு நிரூபிக்கப்பட்ட கேப்டன் மற்றும் லீக்கில் மிகவும் அஞ்சப்படும் வீரர்களில் ஒருவர். அழுத்தத்தைக் கையாளும், தனது சக வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் முக்கியமான தருணங்களில் சிறப்பாகச் செயல்படும் அவரது திறன், இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியை வழிநடத்த அவரை சிறந்த கேப்டனாக ஆக்குகிறது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தபோது அர்ஜுனுடன் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, மேலும் அவர் ஆட்டத்திற்குக் கொண்டு வரும் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் அமைதியை நான் நேரடியாக அறிவேன். அவர் மைதானத்திலும் வெளியேயும் ஒரு இயல்பான தலைவர், மேலும் பவனுடன் சேர்ந்து, அவர்கள் ஒரு வலிமையான தலைமைத்துவ மையத்தை உருவாக்குகிறார்கள்." என்று கூறினார்.
உதவி பயிற்சியாளர் சுரேஷ் குமார் பேசுகையில், "இந்த ஆண்டு கேப்டன் பதவிக்கு நாங்கள் பெரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், அவர்கள் அற்புதமான ரைடர்கள் என்பதை நாங்கள் அறிவோம் - பவனும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். இந்த ஆண்டு, எங்களிடம் வலுவான வரிசை உள்ளது, மேலும் அவர்கள் அணிக்கு வழி வகுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று அவர் கூறினார்.
தலைமை நிர்வாக அதிகாரி ஷுஷேன் வஷிஷ்ட் பேசுகையில், "பவனின் ஈடு இணையற்ற அனுபவத்தாலும், அர்ஜுனின் அபார திறமையாலும், இந்த தலைமைத்துவ இரட்டையர் அணி, மைதானத்தில் தங்கள் சிறந்ததை வெளிப்படுத்த ஊக்கமளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய கிட் எங்கள் பசி, ஒற்றுமை மற்றும் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் கனவை பிரதிபலிக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.
புதிய பயிற்சியாளர்கள், புதிய கேப்டன், புதிய திட்டங்களுடன் களமாடும் தமிழ் தலைவாஸ் இந்த முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.