/indian-express-tamil/media/media_files/2025/08/14/tamil-thalaivas-assistant-coach-suresh-kumar-interview-tamil-news-2025-08-14-17-58-13.jpg)
"எங்களைப் பொறுத்தவரையில், தமிழக வீரர்களுக்கு 100 சதவீதம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்." என்று தமிழ் தலைவாஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் கூறினார்.
12-வது புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பெறாதது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்ட அணியில், சொந்த மாநிலத்தை சேர்ந்த ஒரு வீரர் கூட அணியில் இல்லாதது பற்றி சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதுவரை 7 சீசன்களில் ஆடி ஒருமுறை கூட கோப்பை கனவை நெருங்காத அணி 'தமிழ் தலைவாஸ்' என்கிற விமர்சனம் இருக்கும் சூழலில், தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பது ஏற்கனவே இருக்கும் விமர்சனங்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வண்ணம் அமைத்திருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/d029f5ed-1aa.jpg)
இத்தகைய நிலையில், வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் 12-வது புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் மற்றும் ஜெர்ஸி அறிமுக விழா நேற்று புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் செராவத், துணை கேப்டனாக அர்ஜுன் தேஷ்வால் நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷுஷேன் வஷிஷ்த், தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பால்யன், உதவி பயிற்சியாளர் சுரேஷ்குமார், வீரர்கள் பவன் செராவத், அர்ஜுன் தேஷ்வால், சாகர் ரதீ, மொயின் ஷஃபாகி, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு உதவிப் பயிற்சியாளர் சுரேஷ்குமாரை நேரில் சந்தித்துப் பேசினோம். அவரிடம், 'தமிழ் தலைவாஸில் ஒரு 'தமிழக' வீரர் கூட ஏன் இடம் பெறவில்லை என்பது குறித்து கேட்டோம்.
/indian-express-tamil/media/post_attachments/bf9590c0-e7b.jpg)
இதுபற்றி உதவிப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் நம்மிடம் தெரிவிக்கையில், "கபடி பற்றிய அனைத்து விஷயங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எல்லா அணிகளைப் பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக சொல்வார்கள். கடந்த ஆண்டு கூட ஒரு தமிழ்நாட்டு வீரரை நாங்கள் அணியில் சேர்த்து இருந்தோம். ஆனால், காயம் காரணமாக அவரால் அணியில் தொடர முடியவில்லை.
இந்த சீசனுக்கு தேவையான வீரர்களை ஏற்கனவே அணி நிர்வாகம் தேர்வு செய்து இருந்தார்கள். பின்னர் நடந்த ஏலத்தில் கூட கம்மியான வீரர்களைத் தான் நாங்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அதோடு, ஏலத்தில் நமது அணிக்கு தேவையான வீரர்கள் கிடைக்கவில்லை. தவிர, பல வீரர்கள் அவர்கள் முன்பு ஆடிய அணியால் தக்கவைக்கப்பட்டு விட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/2817c33c-35d.jpg)
குறிப்பாக நமது அணிக்கு ரைட் கவர் தேவைப்பட்டது. அந்த இடத்தில் ஆடக்கூடிய தமிழக வீரரான அபினேஷ் நடராஜனை புனே அணி தக்க வைத்தனர். இதேபோல், சுதாகர், அஜித் போன்ற வீரர்களும் அவர்கள் ஆடிய அணியால் தக்கவைக்கப்பட்டனர். மற்ற இடங்களில் தேவைப்பட்ட வீரர்கள் முன்பே தக்க வைக்கப்பட்டனர். ஏலம் மூலமும் வாங்கப்பட்டனர். ஆனால், அடுத்த சீசனில் நமது அணிக்காக ஆடக்கூடிய தமிழக வீரரை நாங்கள் இப்போது முதலே தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழ் தலைவாஸ் 5-வது சீசனில் அறிமுகமாகி இருந்தாலும், இப்போது வரை 25 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற வேறு எந்த அணியும் அவர்களது சொந்த மாநில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததே இல்லை. தமிழக வீரரர்கள் பலரும் தொடர்ந்து ட்ரையல்சுக்கு வந்து கலந்துகொள்கின்றனர். எங்களைப் பொறுத்தவரையில், தமிழக வீரர்களுக்கு 100 சதவீதம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்." என்று அவர் கூறினார்.
இந்த முறை கோப்பை வெல்லும் வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று அவரிடம் கேட்டபோது, "கோப்பை வெல்வது என்பது 12 அணிகளின் கனவு தான். எங்களின் திட்டம் என்னவென்றால், படிப்படியாக முன்னேறுவது தான். முதலில் முடிந்தவரை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும். அதுதான் எங்களின் முதல் இலக்கு. அதனை முதல் ஆட்டத்தில் இருந்தே தொடங்குகிறோம்.
/indian-express-tamil/media/post_attachments/ccc2c2d2-ff0.jpg)
நமது அணியைப் பொறுத்தவரையில், அனைத்து வீரர்கள் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம். கடந்த சீசன்களில் காயம் காரணமாக அணியின் பேலன்ஸ் மிஸ் ஆகியது. ஆனால், இந்த முறை அப்படி இருக்காது. பேக்-அப்க்கு கூட அணி பேலன்ஸ் ஆக இருக்கிறது. களத்தில் ஆடும் முதன்மையான 7 வீரர்களுடன் அடுத்த 7 வீரர்களும் வலுவாக உள்ளார்கள். ஆடும் அணியில் யார் இல்லை என்றாலும், அந்த வீரருக்கு இணையாக அவரது இடத்தை நிரப்பக் கூடிய வீரர்கள் உள்ளனர். ஜூலை முதல் சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்துள்ளோம்.
பொதுவாக, வெற்றி பெற வேண்டும் என்பதில் எப்போதுமே அழுத்தம் இருக்கும். குறிப்பாக அது ஒவ்வொரு போட்டியின் போதும் இருக்கும். எல்லா அணிகளுக்குமே அது இருக்கும். இந்த முறை சஞ்சீவ் பால்யன் இருப்பதால் கூடுதல் முயற்சி போட்டு, வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முயல்வோம். இந்த முறை நல்ல முடிவு வரும்.
நமது அணியின் ரசிகர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அனைவரும் சிறப்பாக ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்." என்று உதவிப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் கூறினார்.
29 ஆம் தேதி தொடங்கும் 12-வது புரோ கபடி லீக் தொடரில், முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.