Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 74-37 என்கிற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த பிரமிக்க வைக்கும் வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் புரோ கபடி லீக் வரலாற்றில் அற்புதமான சாதனையை படைத்ததுள்ளது. அதாவது, புரோ கபடி லீக்கின் ஒரே ஆட்டத்தில் 70 புள்ளிகளைக் கடந்த முதல் அணி என்ற சாதனையை தமிழ் தலைவாஸ் அணி படைத்துள்ளது. அது மட்டுமல்லாமல், பெங்கால் வாரியர்ஸில் 6 ஆல்-அவுட்களை எடுத்ததன் மூலம், ஒரே போட்டியில் அதிகபட்சமாக, ஆல்-அவுட்களை எடுத்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. முன்னதாக ஒரு போட்டியில் 5 ஆல்-அவுட்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
இந்த போட்டியில் இரு அணிகளும் மொத்தம் 111 புள்ளிகளைக் குவித்துள்ளன, இது ஒரு போட்டியில் திரட்டப்பட்ட அதிக புள்ளிகள் என்ற சாதனையையும் முறியடித்துள்ளது. மேலும், பாட்னா பைரேட்ஸ் மற்றும் அதே எதிரணியான பெங்கால் வாரியர்ஸ் அமைத்த 110 என்ற சாதனையை முறியடித்தது. 69-41 என மூன்று முறை பாட்னா பைரேட்ஸ் அணி வென்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“