/indian-express-tamil/media/media_files/2025/09/03/tamil-thalaivas-captain-pawan-sehrawat-talks-about-arjun-deshwal-pkl-2025-tamil-news-2025-09-03-18-10-09.jpg)
"எனக்குப் பிற அணிகள் அனைத்தும் ஒன்றே. ஒவ்வொரு போட்டியும் சவாலானதே. எந்த ஒரு அணி மட்டும் பலமாக உள்ளது என்று இல்லை" என்று தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் தெரிவித்தார்.
12 அணிகள் அணிகள் ஆடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற ஆகஸ்ட் 29 முதல் தொடங்கி நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாகவே விளையாடி வருகிறது. தொடர் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணியில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டுவது இப்போது பொருந்தாத ஒன்று.
தமிழ் தலைவாஸ் அணி ஆகஸ்ட் 29 அன்று நடந்த தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து மண்ணைக் கவ்வ வைத்தது. 38 - 35 என்கிற புள்ளிகள் கணக்கில் வென்று, தொடரை வெற்றிகரமாக தொடங்கியது. இருப்பினும், ஆகஸ்ட் 31 அன்று நடந்த ஆட்டத்தில் யு மும்பா அணியிடம் 36 - 33 என்கிற புள்ளிகள் கண்ணாக்கில் வீழ்ந்தது. இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வருகிற 6 ஆம் தேதி அன்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி நிலை நாட்ட தீவிர பயிற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரரான அர்ஜுன் தேஷ்வாலை தான் எப்படி பயன்படுத்தப் போகிறேன் என்பதை கேப்டன் பவன் ஷெராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பவன் ஷெராவத் பேசுகையில், “டை-பிரேக்கர் விதி மிகவும் சுவாரஸ்யமானதும், விளையாட்டுக்கு நல்லதுமாக உள்ளது. இது உங்களுக்கு உங்கள் திறன்களை கூர்மையாக்கவும், முன்னணியில் விளையாடவும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய விதியால், ஐந்து ரெய்டர்கள் மைதானத்தில் இருக்கும் அணி சிறப்பாக செயல்படுகிறது.
எந்த வீரர் அணியில் இருந்து முன்னேறி விளையாடுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த விதி மாற்றங்கள் சமனில் முடிக்காமல், ஒரு ‘டூ-அர்-டை’ அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன. இது புரோ கபடிக்கு ஒரு நேர்மையான முன்னேற்றம். எனக்கு இந்த விதிகள் மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றுகின்றன, மேலும் ரசிகர்களும் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள்.
பேப்பரில் பார்க்கும்போது ஒருவரும் முக்கிய ரெய்டராக இல்லை. ஆனால் கேப்டனாகவும் மூத்த வீரராகவும், எந்த வீரர் எந்த நிலையில் சிறப்பாக செயல்படுவார் என்பதை நான் கவனிக்க வேண்டும். உதாரணமாக, அர்ஜுன் தேஷ்வால் ஒரு குறிப்பிட்ட டிஃபென்ஸுக்கு எதிராக அதிக புள்ளிகள் எடுக்க முடியும் என்று நான் நினைத்தால், அவரை அனுப்புவது என் கடமை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பங்கு உள்ளது, மேலும் அர்ஜுன் தனது பங்கினை சிறப்பாக செய்கிறார். இந்த சீசனில் ஒரே முக்கிய ரெய்டர் இல்லை; அணியின் தேவைக்கு ஏற்ப செயல் படுத்துவதே முக்கியம்.
ஒவ்வொரு சீசனும் தானாகவே மாற்றங்கள் நடக்கின்றன. பெரிய மாற்றங்கள் தேவையில்லை; உங்கள் திறன்களை மேம்படுத்தி, உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும். தற்போது, நான் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை 100% செய்கிறேன். மாற்றங்கள் தொடர்ந்து நடக்கும், ஏனெனில் சீசன் 3-ல் விளையாடிய பவன், சீசன் 12-ல் விளையாடும் பவனைப் போல இல்லை. புதிய வீரர்களுடன் பயிற்சி செய்வதால் புதிய திறன்களை கற்றுக் கொள்கிறீர்கள், அதில் நிறைய கற்றுக் கொள்ள முடியும். திறன்கள் தானாகவே வளர்கின்றன; நீங்கள் அவற்றை மேம்படுத்தினால் போதும். அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.
எனக்குப் பிற அணிகள் அனைத்தும் ஒன்றே. ஒவ்வொரு போட்டியும் சவாலானதே. எந்த ஒரு அணி மட்டும் பலமாக உள்ளது என்று இல்லை; எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடுகின்றன. நாங்கள் அதற்கேற்றாற்போல் திட்டமிட்டு விளையாடுவோம். அவர்களின் பலவீனங்களைப் படிப்போம், எங்களுடையவற்றையும் சரிசெய்வோம். எங்களிடம் வலுவான டிஃபென்ஸ் மற்றும் வலுவான ஆப்ஃபென்ஸ் உள்ளது. திட்டத்திற்கேற்ப டிஃபென்ஸ் அல்லது அட்டாக் பயன்படுத்துவோம். அணிக் கூட்டத்தில் அதை விவாதித்து, பிறகு செயல்படுத்துவோம்.” என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.