Tamil Thalaivas coach Ashan Kumar Tamil News: புரோ கபடி லீக் தொடர் வரலாற்றில் முதல்முறையாக பிளே- ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது தமிழ் தலைவாஸ். இது கனவா? அல்லது நனவா? என்று தங்களையே கிள்ளிப் பார்க்கும் தருணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதன் ரசிகர்களுக்கு இருந்தது. ஏன்னென்றால், இந்த தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தின் போது, தமிழ் தலைவாஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த பவன் செஹ்ராவத், முதல் 10 நிமிடங்களில் முழங்கால் காயம் காரணமாக வெளியேறினார்.
பின்னர் வந்த வெளிவந்த அறிக்கைகளில் அவர் காயத்தில் இருந்து மீளாததால், அவர் தொடரில் இருந்தே விலகுகிறார் என்று குறிப்பிட்டது. அவரின் இந்த திடீர் விலகல் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதை அனைவருமே கண்கூடாக பார்த்தோம். அதாவது தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு அந்த அணி முதல் ஆறு ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து இருந்தது.
இப்படி தொடரும் போட்டிகளும் நகர்ந்த நேரத்தில், நிலைமையை மோசமாக்கும் வகையில், பயிற்சியாளர் ஜெ. உதய குமார், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வந்தது. இந்த அடுத்த இடி அணி வீரர்களுடன் ரசிகர்களையும் பெரிதும் பாதித்தது. அவருக்கு பதில் பயிற்சியாளர் அஷன் குமார் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
முன்னாள் இந்திய பயிற்சியாளரான அஷன் குமார் பற்றி கபடி வட்டாரங்களில் மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்த நிலையில், அவரின் இருப்பு அணியில் எந்தவகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் அறியாமல் இருந்தனர். சிலர் அவர் குறித்து குறைத்தும் மதிப்பிட்டு இருந்தனர். ஆனால், எல்லா வகையினருக்கும் தனது அணி வீரர்களைக் கொண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொடுத்தார் பயிற்சியாளர் அஷன் குமார். தமிழ் தலைவாஸ் அணியினர் அடுத்த 16 போட்டிகளில் 10 வெற்றிகள் மற்றும் மூன்று டிராக்களை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களுக்கு முன்னேறி மிரட்டி இருந்தனர். இதன் பின்னணியில் அவர்களின் பயிற்சியாளருக்கு முக்கிய பங்குண்டு என்றால் மிகையாகாது.

61 வயதான பயிற்சியாளர் அஷன் குமார், முன்பு ஈரான் மற்றும் தென் கொரிய அணிகளுடன் பணிபுரிந்துள்ளார். இந்த இரு அணிகளுமே ஆசிய கோப்பை போட்டிகளில் அதுவரை தோல்வி முகம் காணாத இந்தியாவை புரட்டியெடுத்தனர். அதற்கு இவரின் சாணக்கியத்தனமே காரணம். அது அப்போது பெரிதும் பேசப்பட்டது. அவர் தமிழ் தலைவாஸ் அணிக்கான பொறுப்பை ஏற்றது, ஒரு பெரிய சவாலாக இருந்தபோதிலும், தன்னிடம் இன்னும் தந்திரங்கள் புதைந்து கிடப்பதை நிரூபித்தார். மேலும் அணிக்காக அவர் போட்டு வைத்த திட்டங்களும் பலனளித்தன.
தந்திரமான சூழ்நிலைகளைக் கையாளும் போது பயிற்சியாளர் அஷன் குமாரின் அமைதியான அணுகுமுறை பல அதிசயங்களைச் செய்தது. சோர்ந்து இருந்த வீரர்களின் நரம்புகளைத் தளர்த்தி, அவர்களுக்கு மரியாதை காட்டுவதன் மூலம், அவர்களிடமிருந்து சிறந்ததைக் கொண்டு வர முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இப்படியாக அவரின் பக்குவமும், பயிற்சியும் குறித்து நாம் அடுக்கிக்கொண்டே செல்லாம்.
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் அஷன் குமார், தன்னைப் பொறுத்தவரை, விளையாட்டுக்கு இரண்டாவது முக்கியத்துவம் தான். ஒழுக்கம் தான் முதன்மையானது என்று கூறியுள்ளார்.
தனியார் செய்தி இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியுள்ளது பின்வருமாறு:-
“முதல் ஆறு போட்டிகளில் மோசமாக செயல்பட்ட அணியின் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. வீரர்கள் கடுமையான உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, நான் எனது வீரர்களுக்கு நேரத்தை வழங்க திட்டமிட்டேன். மறுமதிப்பீடு செய்து கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கினேன். அவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தை கொடுத்தால், அவர்களால் விஷயங்களை மாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்பினேன்.

ஒரு சூழ்நிலையை மதிப்பிடும்போது, அமைதியைக் காட்டுவதும், வீரர்களுக்கு அவர்களுக்குத் தகுதியான மரியாதையை வழங்குவதும் இன்றியமையாதது. அது சிக்கல்களைத் தீர்ப்பதில் பெரும் பங்களிப்பை வழங்கும். திறமை கொண்ட வீரர்கள் வெளியில் அமர்ந்திருப்பதை நான் குறிப்பிட்டேன். மேலும் அஜிங்க்யா ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கக் கூடாத திறமைகளில் ஒருவர்.
ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் உணவுமுறை ஆகிய மூன்றும் ஒவ்வொரு கபடி வீரரின் மிக முக்கியமான அம்சங்களாகும். எனக்கு இராணுவ பின்னணி உள்ளது. ஒழுக்கமின்மையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பலவீனத்தில் ஒருபோதும் என்னால் சமரசம் செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரை, விளையாட்டு இரண்டாவது முன்னுரிமை, ஒழுக்கம் முதன்மையானது.
நாங்கள் அனைவரையும் தோற்கடித்துள்ளோம், எந்த அணியிலிருந்தும் பெரிய அச்சுறுத்தலை நான் காணவில்லை. அணி அழுத்தத்தை உணர்ந்து அதன் காரணமாக ஓரங்கட்டப்படும்போது உண்மையான அச்சுறுத்தல் இருக்கும். எனவே, எந்த எதிரிணியையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ள பயிற்சியாளர் அஷன் குமார் பிளேஆஃப்களில் அவரது வீரர்கள் “புதிய தொடக்கத்தை” உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil