தொடர்ச்சியான தோல்விகளால் தமிழ் தலைவாஸ் கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன் பதவி விலகியுள்ளார். இதனை தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புரோ கபடி லீக் தொடரில், கடந்த 2017 முதல் களமாடி வருகிறது தமிழ் தலைவாஸ் அணி. 2017 சீசனில் மோதிய 22 போட்டிகளில் 6ல் மட்டும் வென்றது. 2018ல் 22 போட்டிகளில் 5ல் வென்றது. இம்முறை எப்படியும் எழுச்சி பெறும் என நம்பப்பட்டது. மாறாக இதுவரை மோதிய 13 போட்டிகளில் 3ல் மட்டும் வென்றது. தொடர்ந்து ஆறு தோல்வி பெற்ற இந்த அணி, 27 புள்ளியுடன் பட்டியலில் 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த சீசனில், இதுவரை தமிழ் தலைவாஸ் மொத்தமாக 536 ரெய்டுகள் சென்றுள்ளது. அதில் 167ல் மட்டுமே வெற்றிகரமாக புள்ளிகள் கிடைத்துள்ளது. வெற்றிகரமான ரெய்டு சதவிகிதம் 39% மட்டுமே.அதேபோல், இந்த சீசனின் 273 டேக்கிளில் 157 டேக்கிளை தமிழ் தலைவாஸ் தவற விட்டிருக்கிறது. இதனால், தொடர் தோல்விகளை தவிர்க்க முடியவில்லை.
இதையடுத்து பயிற்சியாளராக இருந்த எடச்சேரி பாஸ்கரன் பதவி விலகினார். இவருக்குப் பதில் 2002, 2006 மற்றும் 2014 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று தந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் உதய்குமார் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இன்னும் 9 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் 7ல் வெற்றி பெறும் பட்சத்தில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.