/indian-express-tamil/media/media_files/2025/02/04/eZbKJzZwetFPwVd33Nal.jpg)
"நமது சொந்த அணியை பலப்படுத்துவதும், பிறகு மற்றவர்களை நோக்கிப் பார்ப்பதும் முதல் இலக்கு" என்று தமிழ் தலைவாஸ் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் கூறினார்.
ச. மார்ட்டின் ஜெயராஜ்.
புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடரில் களமாடி வரும் அணி தமிழ் தலைவாஸ். சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த அணி, கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்த 11-வது பி.கே.எல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்து, தொடரில் இருந்து விடைபெற்றது. தமிழ் தலைவாசுக்கும் 9-வது இடத்துக்கும் அப்படி என்ன ராசி எனத் தெரியவில்லை. புரோ கபடியின் 5-வது சீசனான 2017 ஆம் ஆண்டில் களம் கண்ட முதல், தொடரின் முடிவில் அந்த இடத்தை தவறாமல் பிடித்து விடும்.
ஆனால், 2022-ல் நடந்த 9-வது சீசனில் பழைய கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக அரைஇறுதிக்கு, அதாவது பிளே-ஆப்க்கு முன்னேறி வரலாறு படைத்தது. அந்த சீசனில் டாப் வீரரான பவன் செஹ்ராவத் தொடக்க ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலே காயம் காரணமாக வெளியேறி, தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறினார் . சில முக்கிய வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
ஆனாலும், தமிழ் தலைவாஸ் வெற்றி மேல் வெற்றிகளை ருசித்து தொடரில் விறுவிறுவென முன்னேறியது. அரைஇறுதிக்கு முன்னேறிய அந்த அணி இறுதிப் போட்டிக்கும் சென்று மேலும் ஒரு வரலாறுச் சாதனையை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் போட்டியில் அவர்கள் பெற்ற தோல்வியால் அவர்களின் கோப்பை வெல்லும் கனவு கானல் நீராய்ப் போனது.
இந்த தோல்வியின் வடுக்கள் அடுத்த சீசனிலும் தொடர்ந்தது. 22 போட்டிகளில் களமாடிய தமிழ் தலைவாஸ் 9 வெற்றிகள், 13 தோல்விகளுடன் பிளே-ஆப்க்கு தகுதி பெறாமல் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இத்தகைய சூழலில், 11-வது சீசனில் அணியில் புதிய வீரர்கள், அவர்களுக்கு புத்துயிர் கொடுக்க புதிய பயிற்சியாளர்கள் என புதிய கட்டமைப்புடன் களமாடியது தமிழ் தலைவாஸ்.
அணிகள் பொதுவாக தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் என்கிற பதவிகள் அடிப்படையில் நியமனம் செய்யும். ஆனால், பி.கே.எல் தொடர் வரலாற்றில் முதன்முறையாக, அணியை மேம்படுத்தவும், கூட்டாக வழிநடத்தவும் இரட்டை பயிற்சியாளர் முறையை தமிழ் தலைவாஸ் அணி தேர்வு செய்தது. அதன்படி, மூத்த பயிற்சியாளராக உதய குமாரையும், வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனையும் நியமித்தது.
ஆனாலும், இந்த அதிரடி மாற்றங்கள் தமிழ் தலைவாசுக்கு கை கொடுக்கவில்லை. கடந்த சீசனைப் போல் சிறப்பான ஆரம்ப வெற்றிகளைப் பெற்றாலும் அடுத்தடுத்து அவர்கள் பெற்ற தோல்விகள், அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் போவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. 22 போட்டிகளில் ஆடிய தமிழ் தலைவாஸ் 8 வெற்றி, 13 தோல்வி மற்றும் ஒரு டிரா என 50 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தது.
இந்த சீசனில் அணி பெரிய அளவில் சோபிக்காத நிலையில், இரண்டு பயிற்சியாளர்களையும் கழற்றி விட்டது. தற்போது தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பாலியன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கபடி ரசிகர்களுக்கு சஞ்சீவ் பாலியன் பற்றி அறிமுகம் தேவையில்லை. பி.கே.எல் தொடரில் வலம் வரும் டாப் பயிற்சியாளர்களில் ஒருவர் இவர். சாம்பியன்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற அவர், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவியிருக்கிறார்.
ஜூனியர் இந்திய கபடி அணியின் தேர்வாளராகவும் பணியாற்றிய சஞ்சீவ் பாலியன், கபடியில் தந்திரோபாய மேதையாகக் அறியப்படுகிறார். அவரது கபடி மூளை எதிரணிகளை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது. திட்டங்கள் தீட்டுவதிலும், அதனை களத்தில் வீரர்கள் வழியாக செயல்படுத்துவதிலும் அவர் கில்லாடி. பி.கே.எல் தொடரில் தங்களை அசைக்க முடியாத அணி என கொக்கரித்த அணிகளை தனது வீரர்களைக் கொண்டு அசைத்துப் பார்த்த அசாத்திய வீரன். மொத்தமாக சொல்வதென்றால் பலமும் மூளையும் கொண்ட சாம்பியன் பயிற்சியாளர். அவரை இறக்கி இருப்பதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை முதல்முறையை தட்டிச் செல்ல திட்டமிட்டுள்ளது.
சஞ்சீவ் பாலியன் பேட்டி
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் பாலியனை கேள்விகளுடன் தொடர்பு கொண்டோம். அவரும் இன்முகத்துடன் பதிலளித்திருக்கிறார்.
மார்ட்டின் ஜெயராஜ்: 2 அணிகள் கோப்பையை வெல்ல உதவியிருக்கிறீர்கள், ஒரு சாம்பியன் அணி பயிற்சியாளராக, பி.கே.எல் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் முழு பயணத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்?
சஞ்சீவ் பாலியன்: ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா அணிகள் இதற்கு முன்பு நான் பயிற்சியாளராக இருந்து கோப்பைகளை வென்றது எனக்கு தெரியும். தமிழ் தலைவாஸிலும் அதையே செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். அணி வரலாற்று ரீதியாக சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, அவர்கள் இதற்கு முன்பும் அரையிறுதியில் விளையாடியுள்ளனர். அவர்கள் அந்த இறுதித் தடையைக் கடக்க வேண்டும், அடுத்த சீசனில் அதைச் செய்ய ஒரு அணியாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
மார்ட்டின் ஜெயராஜ்: 2022 சீசனில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியவில்லை. புதிதாக இணைந்த பயிற்சியாளராக, அவர்களிடம் என்ன குறை இருக்கிறது? எந்தப் பிரிவில் அவர்களுக்கு இன்னும் முன்னேற்றம் தேவை என நீங்கள் நினைக்கிறீர்கள்?
சஞ்சீவ் பாலியன்: எவ்வளவு நல்ல அணியாக இருந்தாலும், தொடரின் முடிவில் 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும். அழுத்தம் நிறைந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் அந்த அழுத்தத்தை சமாளிக்கும் அணிகள் தான் வெற்றி பெறும்.
தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரையில், சில சந்தர்ப்பங்களில், அவர்களால் அந்த முக்கியமான புள்ளிகளைப் பெற முடியவில்லை மற்றும் சில சந்தர்ப்பங்களில், அவர்களால் அந்த வெற்றியை தீர்மானிக்கும் புள்ளிகளை எடுக்க முடிவதில்லை. அந்த தருணங்களை மாற்றுவது தான் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி. அதனைக் கூர்மைப்படுத்தி, தருணம் வரும்போது, இந்த முறை தமிழ் தலைவாஸ் முதலிடம் பெறுவதை உறுதி செய்வதே திட்டம்.
மார்ட்டின் ஜெயராஜ்: தமிழ் தலைவாஸ் அணி முதல் கோப்பையை வெல்ல உங்கள் அனுபவமும், ஸ்டெட்டர்ஜியும் (உத்தி) அவர்களுக்கு உதவுமா?
சஞ்சீவ் பாலியன்: உத்தி என்பது ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு பயிற்சியாளரும் ஒவ்வொரு சீசனுக்கு முன்பும் கொண்டு வருவார்கள். ஆனால் ஒரு சீசன் முடிவடையும் விதம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. எனது அனுபவம், எனது திட்டங்களுடன் மிகவும் நெகிழ்வாக இருக்கவும், சீசன் தொடங்கியவுடன் விளையாட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து உருவாக்கவும் கற்றுக் கொடுத்தது, மேலும் நாங்கள் மற்ற அணிகளையும் பகுப்பாய்வு செய்து வருகிறோம்.
மார்ட்டின் ஜெயராஜ்: வீரர்களின் காயங்கள் காரணமாக இந்த சிக்கித் தவித்தது உண்டு. அதை எப்படி கையாளப் போகிறீர்கள்?, ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு திட்டங்களை நீங்கள் வைத்திருக்கலாம். களத்தில் உங்கள் வீரர்கள் மூலம் உங்களின் திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றப் போகிறீர்கள்?
சஞ்சீவ் பாலியன்: காயங்கள் இந்த விளையாட்டின் மிகவும் இயல்பான பகுதியாகும், காயங்களைத் தவிர்ப்பது திட்டம் அல்ல. ஏனெனில் அது எந்த அணிக்கும் பொருந்தாது. ஆனால் எனது அணியுடன் சேர்ந்து காயங்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் மற்றும் வீரர்கள் தங்கள் உடற்தகுதியை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதை உறுதி செய்வோம். வரும் சீசனில் வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வீரருடனும் அணி முழுமையான பகுப்பாய்வு செய்து வேலை செய்யும்.
மார்ட்டின் ஜெயராஜ்: சில முன்னணி வீரர்கள் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த போராடுகிறார்கள்? போட்டிகளில் விளையாடும் முன் அவர்களிடம் நீங்கள் சொல்லும் ஒரு விஷயம் என்ன?
சஞ்சீவ் பாலியன்: முன்னணி வீரர்கள் அல்லது மற்ற எல்லா வீரர்கள் மீது கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் களத்தில் இருக்கும் அனைவருக்கும் கேம் பிரஷர் (போட்டி அழுத்தம்) இருக்கும். டாப் வீரர்கள் மட்டும் அழுத்தத்தை கட்டுப்படுத்த சொல்லிக் கொடுப்பது எங்களது திட்டம் இல்லை. எனது அணியில் அப்படி டாப் வீரர் யாரும் இல்லை, அனைத்து வீரர்களும் ஒரு காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கை செய்ய வேண்டும். எங்களது முடிவில் இருந்து வரும் செய்தி எப்போதும் விளையாடுவதாக இருக்கும். அவர்களின் முழுமையான திறனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் ரோலை முடிந்தவரை நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வோம். வெளியில் எந்த அழுத்தமும் இல்லாமல் அணி கவனம் செலுத்தி அவர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நான் உறுதி செய்வேன்.
மார்ட்டின் ஜெயராஜ்: தமிழ் தலைவாஸ் கடந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் அந்த 3 முதல் 4 புள்ளிகளைப் பெற முடியாமல் தோல்வியடைந்தனர். இந்த சிக்கலை தீர்க்க உங்களது யோசனைகள் என்ன?
சஞ்சீவ் பாலியன்: தமிழ் தலைவாஸ் அந்த தருணங்களில் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இருந்திருக்கிறார்கள். சில சமயங்களில் காயம் அல்லது அந்த தருணத்தைப் பொறுத்தது. அணியை தோல்வியடையச் செய்த அனைத்து காரணிகளையும் மாற்றி, அவர்களை சாம்பியனாக்குவது இப்போது எனது பொறுப்பு.
மார்ட்டின் ஜெயராஜ்: சில புள்ளிகளை இழந்த பிறகு அல்லது தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, நீங்கள் அணிக்கு என்ன சொல்வீர்கள்?
சஞ்சீவ் பாலியன்: தொடர்ச்சியாக ஒன்றிரண்டு போட்டிகளில் தோல்வியடையும் ஒரே அணி தமிழ் தலைவாஸ் மட்டுமல்ல, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னாவும் சாம்பியன் ஆகும் முன் தொடர் தோல்விகளை பெற்றனர். அதனால், அவர்களுக்கு சொல்வது, 'நாம் அடுத்த ஆட்டத்தை எதிர்நோக்க வேண்டும்' என்பது தான்.
மார்ட்டின் ஜெயராஜ்: வரவிருக்கும் சீசனில் நீங்கள் சவால்களாக கருதுபவை என்ன? மற்ற 11 அணிகளுக்கு எதிராக உங்களது தயாரிப்பு என்ன?
சஞ்சீவ் பாலியன்: இறுதி அணி எப்படி இருக்கும் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, அணியில் வீரர்கள் தேர்வு முடிந்தவுடன் மட்டுமே இதை மதிப்பிட முடியும். இது எங்கள் அணிக்கு மட்டுமல்ல, மற்ற அணிகளையும் சேர்த்துதான் கூறுகிறேன். மற்ற அணிகளுக்கு எதிரான தயாரிப்பு இப்போது எப்படி இருக்கும் என்பதை அறிவது மிகவும் முன்கூட்டியே உள்ளது. நமது சொந்த அணியை பலப்படுத்துவதும், பிறகு மற்றவர்களை நோக்கிப் பார்ப்பதும் முதல் இலக்கு. இரண்டும் இல்லாமல் சாம்பியன்ஷிப்பை வெல்ல முடியாது என்பதால் சரியான தாக்குதல் மற்றும் தற்காப்பு கொண்ட அணியை உருவாக்குவதே முக்கிய நோக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.