pro-kabaddi-league 10 2023 | tamil-thalaivas: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று திங்கள்கிழமை மும்பையில் தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த 2 நாள் ஏலத்தில், முதல் நாள் ஏ மற்றும் பி பிரிவுகளிலும், அடுத்த நாளான இன்று சி மற்றும் டி பிரிவுகளிலும் உள்ள வீரர்களை 12 அணிகளும் முந்தியடித்து வாங்கி வருகின்றன.
இந்த ஏலத்தில் மொத்தமாக 595 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் வாங்கலாம். இந்த வீரர்களுக்கான அடிப்படை விலைகள் ஏ பிரிவுக்கு ரூ.30 லட்சமாகவும், பி பிரிவுக்கு ரூ.20 லட்சமாகவும், சி வகைக்கு ரூ.13 லட்சமாகவும், டி பிரிவில் அடிப்படை விலை ரூ.9 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழ் தலைவாஸ் நேற்று முதல் நாள் ஏலத்தின் போது எந்தவொரு வீரரையும் வாங்கவில்லை. குறிப்பாக நட்சித்திர வீரரான பவன் செராவத்தை வாங்கவில்லை. அவரை முந்தைய சீசனில் ரூ. 2.26 கோடிக்கு வாங்கியது. ஆனால், அவர் தொடக்கப் போட்டியில் முதல் 10 நிமிடத்துடன் காயம் காரணமாக தொடரில் இருந்தே வெளியேறினார். அவர் இல்லாத தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தது.
நடப்பு சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக பவனை தமிழ் தலைவாஸ் அணி கழற்றி விட்டது. அவரது தொகையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து. இதனால், அவரை ஏலத்தில் மீண்டும் எடுக்க முன்வரவில்லை ஏலத்தில் அவரை தெலுங்கு டைட்டன்ஸ் அணி 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன்மூலம் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட முதல் வீரர் ஆனார்.
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் இன்று ஈரானைச் சேர்ந்த 2 டிஃபெண்டர்களை வாங்கியது. அமீர்ஹோசைன் பஸ்தாமி ரூ. 30 லட்சம்), முகமதுரேசா கபௌத்ரஹங்கி (ரூ. 19.20 லட்சம்) ஆகிய இரு வீரர்களை வாங்கியது.
யார் இந்த பஸ்தாமி, முகமதுரேசா?
அமீர்ஹோசைன் பஸ்தாமி முந்தைய சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்காக விளையாடியவர். ரைட் கார்னர் டிஃபெண்டரான இவர் இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 24 புள்ளிகளை எடுத்துள்ளார். அவரது டாக்கிள் விகிதம் 32 ஆக உள்ளது.
முகமதுரேசா கபௌத்ரஹங்கி ஈரானின் டிஃபெண்டர் வீரராக அறியப்படுகிறார். இவர் அண்மையில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஈரான் கபடி அணியில் களமாடி இருந்தார். இதே அணியில் அமீர்ஹோசைன் பஸ்தாமியும் இடம் பெற்று இருந்தார். ஈரான் அணி இந்தியாவிடம் தங்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்து வெளிப்பதக்கம் வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“