Pro Kabaddi League 2022 Points Table: Tamil Thalaivas, jump to top 5 Tamil News
Pro Kabaddi League 2022 Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
Advertisment
யு மும்பா அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்
இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 94வது போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 34-20 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சாகர் 7 டக்கில் மற்றும் 1 போனஸுடன் 8 புள்ளிகளையும், நரேந்தர் ஹோஷியார் 6 ரெய்டு மற்றும் 1 போனஸுடன் 7 புள்ளிகளையும் பெற்றனர்.
புள்ளிகள் பட்டியலில் முன்னேறும் தமிழ் தலைவாஸ்
முன்னதாக, தமிழ் தலைவாஸ் நேற்று முன்தினம் நடைபெற்ற 92வது போட்டியில் 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 43 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகளை அடுத்தடுத்த ஆட்டங்களில் வீழ்த்தியதன் மூலம் தற்போது தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 48 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில், தமிழ் தலைவாஸ் அடுத்தடுத்த வெற்றிகளை ருசித்து வருகிறது. அந்த அணி இனி வரும் ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் என்பதில் சந்தேகமில்லை.