Pro-kabaddi-league | tamil-thalaivas: தென் குமரிக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி தென் மாவட்டத்தை புரட்டப் போட்டது. விடிய விடிய பெய்த அதிகன மழை மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க செய்தது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஊர், நகரம், மாவட்டம் என அனைத்தையும் மூழ்கடித்தது.
தென் மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்கள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளன. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் காற்றாற்று வெள்ளத்தால் மக்கள் தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் வீரரான தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு மழையில் இடிந்துள்ளது. அவரது குடும்பத்தினர் பாதுக்காப்பாக இருந்தாலும், வீட்டை மழை வெள்ளத்துக்கு பறிகொடுத்த தவிப்பில் உள்ளனர்.
தனது வீடு மழை வெள்ளத்தால் இடிந்தது தொடர்பாக பேசியுள்ள தமிழ் தலைவாஸ் அணி வீரர் மாசானமுத்து பெற்றோருக்கு உதவ இயலவில்லை என்கிற வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "மழை வெள்ளத்தால் ரொம்பவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது வீடே இடிந்து விழுந்துள்ளது. எங்க வீடு மட்டுமல்ல அருகில் இருந்த வீடுகளும் இடிந்துள்ளது. எல்லாரும் ஒரு பள்ளியில் பாதுக்காப்பாக இருக்கிறார்கள்.
அங்க வெள்ளத்தில் அம்மா, அப்பா தவிக்கும் போது, இங்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் போயி தான் வீடு எல்லாம் சரி பண்ணனும். ஊர்ல அப்பா, அம்மா ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கிறார்கள். அக்கா ரெண்டு பெரும் டவுன்ல இருக்காங்க. தம்பி கடலூர்ல படிக்கிறான்.
அப்பா - அம்மாவுக்கு என்னால உதவி முடியலையே என்கிற கஷ்டமாக இருக்கு. அவங்களுக்கு போன் அடிச்சப்ப லைன் போகல. டவர் இல்ல, கரண்ட் இல்ல. அண்ணா போன் பண்ணாங்க. அப்ப தான் வீடு இடிஞ்சி விழுந்துருச்சு-ன்னு சொன்னாங்க. அம்மா அழுத்துடாங்க, என்ன பேசுறதுன்னே தெரியல. நீ நல்லா விளையாடுன்னு சொன்னாங்க.
முதல் சீசன்ல விளையாடுரதுனால அவங்களுக்கு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி வச்சுருந்தேன். அவங்க பாக்க வரதப்ப கஷ்டமாக இருக்கு" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“