தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் செராவத், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சனிக்கிழமை (அக்.8) மாலை காயமடைந்தார்.
பவன் தனது ஆட்டத்தின் போது வலது மூலையில் இருந்து ஆடியபோது, அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான மோதலின் முதல் பத்து நிமிடங்களில் பவன் இரண்டு தாக்குதல்களை நடத்தினார்.அந்த இரண்டு ரெய்டுகளிலும், பவன் ஒரு போனஸ் புள்ளியைப் பெற்றார்.
இந்த நிலையில், 11ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் நட்சத்திரம், பவன் செராவத் வலியால் துடித்தபடி ஆட்டக் களத்தில் இருந்து வெளியேறினார்.
ஆரம்பத்தில், பவன் ஒரு பெரிய காயம் அடைந்தது போல் தோன்றியது, ஆனால் ப்ரோ கபடி லீக் அமைப்பாளர்கள் இப்போது அவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “புரோ கபடி லீக் சீசன் 9 போட்டியின் போது, பவன் செராவத்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
அவரது காயத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவரது மருத்துவப் பரிசோதனைகள் அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். அவர் தற்போது உற்சாகமாக இருக்கிறார். விரைவில் அணிக்கு திரும்புவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பவன் விரைவில் அணிக்கு திரும்புவார் என்றும் அதற்கு முன் அவரது முழு உடல் பரிசோதனையை தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகத்தினர் உறுதி செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக்கில் இன்று தமிழ் தலைவாஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil