pro-kabaddi-league Auction 2023 | pro-kabaddi Season 10, Tamil Thalaivas 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று திங்கள்கிழமை மும்பையில் தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த 2 நாள் ஏலத்தில், முதல் நாள் ஏ மற்றும் பி பிரிவுகளிலும், அடுத்த நாளான இன்று சி மற்றும் டி பிரிவுகளிலும் உள்ள வீரர்களை 12 அணிகளும் முந்தியடித்து வாங்கி வருகின்றன.
இந்த ஏலத்தில் மொத்தமாக 595 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் வாங்கலாம். இந்த வீரர்களுக்கான அடிப்படை விலைகள் ஏ பிரிவுக்கு ரூ.30 லட்சமாகவும், பி பிரிவுக்கு ரூ.20 லட்சமாகவும், சி வகைக்கு ரூ.13 லட்சமாகவும், டி பிரிவில் அடிப்படை விலை ரூ.9 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழ் தலைவாஸ் நேற்று முதல் நாள் ஏலத்தின் போது எந்தவொரு வீரரையும் வாங்கவில்லை. குறிப்பாக நட்சித்திர வீரரான பவன் செராவத்தை வாங்கவில்லை. ஏலத்தில் அவரை தெலுங்கு டைட்டன்ஸ் அணி 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன்மூலம் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட முதல் வீரர் ஆனார்.
தமிழ் தலைவாஸ் இன்று ஈரானைச் சேர்ந்த 2 டிஃபெண்டர்களை வாங்கியது. அமீர்ஹோசைன் பஸ்தாமி (ரூ. 30 லட்சம்), முகமதுரேசா கபௌத்ரஹங்கி (ரூ. 19.20 லட்சம்) ஆகிய இரு வீரர்களை வாங்கியது. தொடர்ந்து இந்திய ரைடர்களான
ஹிமான்ஷு சிங் (ரூ. 25 லட்சம்), செல்வமணி கே (ரூ. 13 லட்சம்), மாசானமுத்து லக்ஷ்ணன் (ரூ. 31.60 லட்சம்), சதீஷ் கண்ணன் (ரூ. 18.10 லட்சம்) உள்ளிட்ட 3 தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களையும் வாங்கியுள்ளது. இந்திய ஆல்ரவுண்டரான ரித்திக் என்ற வீரரை ரூ. 9 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்:
அஜிங்க்யா பவார், சாகர், ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ், நரேந்தர், ஹிமான்ஷு, ஜதின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“