Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்டன் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 29-56 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியைத் தழுவியது.
நடப்பு சீசனை மிகவும் நம்பிக்கையுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பம் முதலே தோல்வி முகத்தால் வாடியது. லீக் சுற்றின் முதல் பாதியில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 10 தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக, சொந்த மைதானமான சென்னையில் நடந்த 4 போட்டியில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதன்பிறகு, எழுச்சி கண்ட தமிழ் தலைவாஸ் 4 போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. மேலும், பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை உயிப்புடன் வைத்திருந்தது.
ஆனால், அதன்பிறகு நடந்த போட்டிகளில் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. நேற்று நடந்த போட்டியுடன் தொடரில் இதுவரை 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் 12ல் தோல்வி, 8ல் வெற்றி என புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் பெற்ற தோல்வி அணிக்கு பெரும் பின்னடைவை தான் கொண்டுவந்துள்ளது. அந்தத் தோல்வி பிளே-ஆஃப் செல்ல ஒட்டிக் கொண்டிருந்த குறைந்தபட்ச வாய்ப்பையும் பறித்து, பிளே-ஆஃப்களில் இருந்து வெளியேற்றியுள்ளது. இனி அடுத்த சீசனில் தான் தமிழ் தலைவாஸ் அதன் தலைவிதியை மாற்றி எழுத முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“