Tamil Thalaivas | Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 6ல் வெற்றி, 9ல் தோல்வி என 35 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆஃப் முன்னேறுமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப்க்கு முன்னேற முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டும். புள்ளிகள் பட்டியலில் 42 புள்ளிகளுடன் பாட்னா பைரேட்ஸ் அணி 6வது இடத்திலும், 40 புள்ளிகளுடன் யு மும்பா 7வது இடத்திலும், 38 புள்ளிகளுடன் பெங்கால் வாரியர்ஸ் 8வது இடத்திலும், 37 புள்ளிகளுடன் பெங்களுரு புல்ஸ் 9வது இடத்திலும் உள்ளன.
தமிழ் தலைவாஸ் அணி இன்னும் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் 6 அல்லது 7வது இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 7 லீக் போட்டிகள் உள்ள நிலையில், பிளே-ஆஃப் வாய்ப்பு இப்போது கொஞ்சம் பிரகாசமாகவே உள்ளது. அதனால், தொடர் வெற்றிகளைப் பெற வேண்டிய காட்டயத்தில் அணி உள்ளது. அப்படி தவறும் பட்சத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“