/indian-express-tamil/media/media_files/2025/10/07/tamil-thalaivas-qualify-for-play-offs-october-5-defeat-pkl-2025-points-table-tamil-news-2025-10-07-21-52-55.jpg)
புதிய விதியின்படி புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். 5, 6, 7 மற்றும் 8-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள், 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு செவ்வாய்க்கிழமை 8 மணிக்கு தொடங்கி நடந்த புரோ கபடி லீக் தொடரின் 69-வது லீக் ஆட்டம் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 56 - 37 என்கிற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.
இருப்பினும், நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் (அக்டோபர் 5) ஆட்டத்தில் 29-33 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி கண்டது. இதனால், புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 8-வது இடத்து தள்ளப்பட்டது. ஆனால், இன்று வெற்றியை ருசித்தது. எனினும், முந்தைய ஆட்டங்களில் அணி சற்று பலத்த தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.
அதே சமயம், தமிழ் தலைவாஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு இன்னும் சிறப்பாகவே உள்ளது. அதற்கு காரணம் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய விதிதான். தற்போதைய புள்ளிப்பட்டியல் நிலை என்ன? தமிழ் தலைவாஸ் அணியால் எப்படி பிளே ஆஃப் செல்ல முடியும்? என்பது பற்றி பார்க்கலாம்.
தற்போதைய நிலவரப்படி, தமிழ் தலைவாஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 5 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அணியின் ஃபார்ம் சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, அணியின் ஸ்கோர் வித்தியாசம் -8 ஆக இருப்பது, புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளுடன் சமநிலையில் இருக்கும் போது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் டபாங் டெல்லி (20 புள்ளிகள்) மற்றும் புனேரி பல்தான் (18 புள்ளிகள்) வலுவாக உள்ளன. அவர்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு டைட்டன்ஸ் (14 புள்ளிகள்) மற்றும் யு மும்பா (12 புள்ளிகள்) முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கின்றன. 5 முதல் 8-வது இடம் வரை கடும் போட்டி நிலவுகிறது. பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
புதிய 'பிளே-இன்' விதி கை கொடுக்குமா?
கடந்த சீசன்கள் வரை, புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். ஆனால், இந்த 12-வது சீசனில், போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்க ஒரு புதிய 'பிளே-இன்' (Play-in) என்ற தகுதிச் சுற்று விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக பிளே-ஆஃப் (Play-offs) சுற்றுக்குத் தகுதி பெறும். 5, 6, 7 மற்றும் 8-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள், 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்த 'பிளே-இன்' சுற்றில், 5-வது இடத்தில் உள்ள அணி 8-வது இடத்தில் உள்ள அணியுடனும், 6-வது இடத்தில் உள்ள அணி 7-வது இடத்தில் உள்ள அணியுடனும் மோதும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள், பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்த புதிய விதிதான் தற்போது தமிழ் தலைவாஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. முந்தைய விதிப்படி, 8-வது இடத்தில் இருப்பது வெளியேற்றத்திற்கான அறிகுறி. ஆனால், இந்த புதிய விதிப்படி, 8-வது இடத்தில் இருப்பது கூட பிளே-ஆஃப் வாய்ப்பிற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும்.
பிளே-ஆஃப்-க்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்?
தமிழ் தலைவாஸ் அணியின் பிளே-ஆஃப் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த 'பிளே-இன்' விதிதான் முக்கியக் காரணம். இனிவரும் போட்டிகளில் அணி என்ன செய்ய வேண்டும்? முதல் இலக்கு - முதல் 8 இடங்களுக்குள் நீடிப்பது தான். தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 10 லீக் போட்டிகள் மீதமுள்ளன. இதில் குறைந்தபட்சம் 5-6 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, முதல் 8 இடங்களுக்குள் நீடிக்க முடியும்.
குறிப்பாக, தங்களுக்குக் கீழ் உள்ள யு.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பதிவு செய்வது அவசியம். வரும் அக்டோபர் 7-ம் தேதி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுவது, இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதோடு, 2 முக்கியமான புள்ளிகளையும் பெற்றுத் தரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.