ProKabaddi League 2022: Tamil Thalaivas’ Sagar injured against Jaipur Pink Panthers Tamil News
Tamil Thalaivas sagar injury update Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
Advertisment
இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று இரவு 8:30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 41-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் சாகர் ரதிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அணியின் ஏஸ் டிஃபென்டரான அவர் வெளியேறியதால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதுவே தோல்விக்கும் வழிவகுத்தது.
ஏற்கனவே, தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டது. அவருக்கு வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடிடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைவாஸ் அணியின் மிகச்சிறந்த டிஃபென்டரான சாகருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயத்தின் தன்மை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக அணி நிர்வாகம் தகவல்களை பகிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரம் காட்டி வரும் தமிழ் தலைவாஸ் அணி அதன் சமீபத்திய போட்டிகளில் அசத்தலான வெற்றியை ருசித்து இருந்தது. ஆனால், கேப்டன் சாகர் காயமடைந்துள்ளது தமிழ் தலைவாஸ் அணி மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.