Tamil Thalaivas PKL 11 Season: 11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) போட்டி ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்தப் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும், 3-வது கட்ட ஆட்டங்கள் புனேயிலும் நடக்கிறது.
புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்களுரூ புல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், புரோ கபடி லீக் போட்டியில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, அதன் தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியானது, நாளை மறுநாள் சனிக்கிழமை ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
தமிழ் தலைவாஸ் விரிவான அலசல்
11-வது புரோ கபடி லீக் போட்டிக்கு தயாராகும் தமிழ் தலைவாஸ் அணி, கடந்த சீசனில் தொடர் தோல்விகளால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 22 போட்டிகளில் ஆடிய அந்த அணி 9 வெற்றிகள், 13 தோல்விகளுடன் பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது. முன்னதாக நடைபெற்ற 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அரைஇறுதிக்கு முன்னேறி தொடரில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. எனினும், அரைஇறுதியில் வெற்றியை ருசிக்காமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
இந்த முறை இரண்டு பயிற்சியாளர்கள், கடந்த சீசனில் இருந்து சில முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டது, ஏலத்தில் சில முக்கிய வீரர்களை வசப்படுத்தியது என புத்துணர்ச்சியுடன் தமிழ் தலைவாஸ் களமாடுகிறது. உதயகுமார் தலைமைப் பயிற்சியாளராகவும், முன்னாள் பி.கே.எல் சாம்பியன் தர்மராஜ் சேரலாதன் வியூக பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளனர்.
பலம்
இந்த சீசனில் தமிழ் தலைவாஸுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இருப்பது, அவர்கள் கடந்த சீசனில் ஆடிய சில முக்கிய வீரர்களைத் தக்கவைத்தது தான். டாப் ரைடர் நரேந்தர் ( 2 சீசன்களில் 429 ரெய்டு புள்ளிகள்), சாகர், அபிஷேக், மற்றும் சாஹில் குலியா போன்ற முக்கிய டிஃபெண்டர்களை தக்கவைத்துள்ளனர். இவர்களுடன் ஏலத்தில் அதிக தொகையான 2.15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட சச்சின் தன்வார் வருகை தமிழ் தலைவாஸின் ரெய்டிங்கை வலுப்படுத்தி இருக்கிறது.
சச்சின் பி.கே.எல் தொடரில் 952 ரெய்டு புள்ளிகளுடன், தி டூ-ஆர்-டை ரெய்டு புள்ளிகளில் லீக்கின் ஆல்-டைம் டாப் வீரராக (233) இருக்கிறார். ரெய்டிங் பிரிவில் இருக்கும் விஷால் சாஹல் மற்றும் சந்திரன் ரஞ்சித் போன்ற பேக்அப் ரைடர்கள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்.
கடந்த சீசனில் முதல் 10 டிஃபெண்டர்கள் வரிசையில் இடம்பிடித்த சாஹில் குலியா மற்றும் சாகர் முறையே 69 மற்றும் 66 டிஃபெண்ஸ் புள்ளிகளுடன் இருக்கிறார்கள். அவர்களை வைத்து டிஃபெண்ஸ் பிரிவில் தமிழ் தலைவாஸ் தங்களுடைய ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப முயற்சிப்பார்கள்.
பலவீனம்
பலமான டிஃபெண்டர்கள் இருந்தபோதிலும், தமிழ் தலைவாஸின் முக்கிய டிஃபெண்டர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், பெரும் பின்னடைவை சந்திக்கும். குறிப்பாக சாஹில் குலியா அல்லது சாகர் காயம் காரணமாக விலகினால் அவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்படும். கடந்த சீசனில் ஒரு சில ஆட்டங்களில் காயம் காரணமாக சாகர் இல்லாதது அணியின் சமநிலையை பாதித்தது. இதனால், எம். அபிஷேக், ஹிமான்ஷு, மோஹித் போன்ற பேக்கப் டிஃபெண்டர்கள் களத்தில் இறங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த சீசனில் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும்.
அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் இல்லாதது அணியின் மற்றொரு கவலையாக பார்க்கப்படுகிறது. இந்த ரோலில் ஈரானிய ஆல்ரவுண்டரான சஃபாகி மட்டுமே அவர்களின் ஒரே விருப்பமாக உள்ளார். இருப்பினும், அவர் இன்னும் பி.கே.எல் போட்டியில் கூட ஆடியது கிடையாது. இதனால், வலுவான ஆல்ரவுண்டர் இல்லாதது அணியின் சமநிலையைப் பாதிக்கலாம். குறிப்பாக அவர்களின் முக்கிய வீரர்களில் ஒருவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் கூடுதல் சிக்கல் இருக்கும்.
வாய்ப்புகள்
இந்த சீசனில் தமிழ் தலைவாஸுக்கு மிகவும் உற்சாகமான வாய்ப்புகளில் ஒன்று, பிகேஎல்லில் சச்சின் 1000-ரெய்டு மைல்கல்லைத் தாண்டியது. அவர் இந்த சாதனையை அடைய இன்னும் 48 புள்ளிகள் மட்டுமே உள்ளது. சச்சின் மற்றும் நரேந்தர் இணைந்திருப்பது அணியின் ரெய்டிங் பிரிவை கணிசமாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைப் பயிற்சியாளராக உதய குமார் மற்றும் வியூகப் பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதன் ஆகியோருடன் இரட்டைப் பயிற்சியாளர் முறையை கொண்டு வந்திருப்பது தமிழ் தலைவாஸ் எடுத்த முடிவு அவர்களின் நிர்வாகத்திற்கு தனித்துவமான பரிமாணத்தை சேர்க்கிறது. இவர்களின் ஒத்துழைப்பு மூலம் அணிக்கு புதிய நுண்ணறிவு மற்றும் புதுமையான உத்திகளை வழங்க முடியும். மேலும் பாரம்பரிய பயிற்சி அமைப்புடன் உள்ள அணிகளை விஞ்சுவதற்கு அவர்களுக்கு உதவும்.
கடந்த சீசனில் (அவரது அறிமுக) 34 ரெய்டு புள்ளிகளுடன் கவர்ந்த விஷால் சாஹல் போன்ற இளம் ரைடர்களும், சந்திரன் ரஞ்சித் (பிகேஎல்லில் 534 ரெய்டு புள்ளிகள்) போன்ற அனுபவமிக்க வீரர்களும் இருப்பது அணிக்கு இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவையை அளிக்கிறது.
அச்சுறுத்தல்
சச்சின் மற்றும் நரேந்தர் ஆகியோர் ரெய்டிங் பிரிவை வழிநடத்துவது, அணிக்கு சில அச்சுறுத்தலை அளிக்கிறது. ரெய்டு புள்ளிகளுக்கு இந்த இரண்டு வீரர்கள் மீது அணி அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. அதனால், அவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் கூட, பேக்அப் திட்டத்துடன் செயல்பட வேண்டும்.
தமிழ் தலைவாஸ் அணியில் ஒரே ஆல்ரவுண்டராக மொயின் சஃபாகி இருக்கிறார். அவருக்கு பி.கே.எல் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லை. அவர் அடிக்கடி சொதப்பினால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அத்தைய சூழல்களை சமாளிக்க தமிழ் தலைவாஸ் தாயாராக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.