/indian-express-tamil/media/media_files/2025/08/22/tamil-thalaivas-swot-analysis-pkl-season-12-tamil-news-2025-08-22-18-03-49.jpg)
தமிழ் தலைவாஸ் இந்த சீசனில் எப்படி கோலோச்சுகிறது என்பது பெரும்பாலும் நிதேஷ் குமார் மற்றும் கேப்டன் சாகர் ரத்தீ ஆகியோரின் ஃபார்மைப் பொறுத்தே அமையும்.
தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று கபடி. ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரைப் போல புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடங்கப்பட்ட போது, தமிழகத்தை பிரதிநிதித்துவம் 5-வது சீசனில் அடியெடுத்து வைத்தது சென்னையை தலைமையிடமாக 'தமிழ் தலைவாஸ்'. அந்த அணி 2017 இல் அறிமுகமானதிலிருந்து இப்போது வரை, ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பை வெல்லவில்லை. 9-வது சீசனில் (2022) ஒரு முறை மட்டுமே பிளேஆஃப்க்கு முன்னேறி அசத்தியது.
தமிழ் தலைவாஸ் அணியை தொடர் தோல்விகளும், பின்னடைவுகளை வாட்டி எடுத்திருக்கும் நிலையில், அந்தத் தடைகளில் இருந்து மீண்டு வர இம்முறை வலுவான ஒரு அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாம்பியன் பட்டத்தை வெல்வதில் புகழ்பெற்ற பயிற்சியாளர்களை பணி அமர்த்தி இருக்கிறது. புதிய தலைமை பயிற்சியாளரான சஞ்சீவ் பாலியன் பாட்னா பைரேட்ஸ் (சீசன் 3) மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (சீசன் 9) அணிகள் சாம்பியன் பட்டத்தை வாகை சூடுவதில் முக்கிய பங்காற்றினார்.
இதேபோல், உதவி பயிற்சியாளரான தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் புரோ கபடி வீரராகவும், சாம்பியன் பயிற்சியாளராகவும் தனது அணி வீரர்களை பட்டை தீட்டி வருகிறார். இவர்களுடன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பவன் செஹ்ராவத், துணை கேப்டனான அர்ஜுன் தேஷ்வால் தங்களது அணி முதல்முறை கோப்பையை முத்தமிட்டுவதை உறுதி செய்ய தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். இந்நிலையில், வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் 12-வது புரோ கபடி லீக் தொடரில் களமாடும் தமிழ் தலைவாஸ் அணியின் பலம், பலவீனம் குறித்து இங்குப் பார்க்கலாம்.
பலம்
புரோ கபடி லீக்கின் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி சந்தேகத்திற்கு இடமின்றி ரெய்டிங் பிரிவில் வலுவாக இருக்கிறது. குறிப்பாக, ரெய்டு மெஷின் என அழைக்கப்படும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலை 1.405 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியதன் மூலம் ரெய்டிங் பிரிவுக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. அவர் புரோ கபடி தொடரில் 114 ஆட்டங்களில் ஆடி 1,174 ரெய்டு புள்ளிகளைக் குவித்து அசத்தியவராக இருக்கிறார்.
இதேபோல், தமிழ் தலைவாஸ் அணி தங்கள் ரெய்டிங் துறையை மேலும் வலுப்படுத்த தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் பவன் செஹ்ராவத்தை 59.50 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. “ஹாய்-ஃப்ளையர்” என்கிற செல்லப்பெயர் கொண்ட அவர் சீசன் 3 இல் பி.கே.எல் தொடரில் அறிமுகமானதிலிருந்து இதுவரை 139 போட்டிகளில் களமாடி 1,318 ரெய்டு புள்ளிகளையும் 70 டேக்கிள் புள்ளிகளையும் குவித்து மிரட்டி இருக்கிறார்.
இதுபோல், தமிழ் தலைவாஸ் அணிக்காக கடந்த சீசனில் சிறந்த ரெய்டர்களாக இருந்த மொயின் ஷஃபாகி மற்றும் நரேந்தர் கண்டோலா ஆகியோரையும் தக்க வைத்துள்ளது. ஈரானிய ஆல்ரவுண்டரான மொயின் ஷஃபாகி 103 ரெய்டு புள்ளிகளைப் பெற்றுள்ளார். அதேநேரத்தில், நரேந்தர் சீசன் 11 இல் 82 ரெய்டு புள்ளிகளை எடுத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து மிரட்டி எடுக்க விஷால் சாஹல் (வலது ரெய்டர்), தீராஜ் ரவீந்திர பைல்மரே, யோகேஷ் யாதவ், அபிராஜ் மனோஜ் பவார் (இடது ரெய்டர்) மற்றும் ரோஹித் குமார் பெனிவால் (இடது ரெய்டர்) போன்றவர்கள் அணியில் உள்ளனர்.
பலவீனம்
இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் டிஃபென்ஸ் எப்படி சவாலை எதிர்கொள்ளும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களிடம் கேப்டன் சாகர் ரத்தீ, நிதேஷ் குமார், புதிய வீரர்கள் அலிரேசா கலிலி, மோஹித் மற்றும் சுரேஷ் ஜாதவ் ஆகியோர் கார்னர்களில் இருந்தாலும், தமிழ் தலைவாஸ் சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று, அவர்களுக்கு கவரில் சிறந்த வீரர்கள் இல்லாதது.
இருப்புனும், தமிழ் தலைவாஸ் அணி ரோனக் மற்றும் தருணை அதன் வலது கவர்களில் வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அனுஜ் கலுராம் கவாடே மற்றும் ஆஷிஷ் போன்றவர்களை இடது கவர்களில் ஆட தக்க வைத்துக் கொண்டது. அவர்களுக்கு பெரிய அனுபவம் இல்லாவிட்டாலும், இந்த சீசன் அவர்களின் திறமையை நிரூபிக்க இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
வாய்ப்பு
தமிழ் தலைவாஸ் அணி தங்களது முதல் பி.கே.எல் கோப்பையை வெல்லும் நோக்கில், லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான தலைமை பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சீவ் பாலியனை அணி புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. புரோ கபடி தொடரைப் பொறுத்தவரையில், சஞ்சீவ் பாலியன் ஒரு பயிற்சியாளராக அவர் அற்புதமான சாதனையைப் படைத்துள்ளார். சீசன் 3-ல் பாட்னா பைரேட்ஸ் அணிக்கும், சீசன் 9-ல் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கும் சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்த பெருமையைப் பெற்றிருக்கிறார். அவரின் வழிகாட்டுதலின் கீழ், சீசன் 11-க்குப் பிறகு தனது பதவியை முடிப்பதற்கு முன்பு, முந்தைய மூன்று சீசன்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பயிற்சியாளரான சுரேஷ் குமார், முன்னாள் புரோ கபடி லீக் வீரர் ஆவார். தமிழ்நாட்டின் ஜாம்பவான் கபடி வீரராக பார்க்கப்படும் இவர், புரோ கபடியில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி மற்றும் யு மும்பா உள்ளிட்ட அணிகளுக்காக (சீசன் 2 முதல் 5 வரை) ஆடிய அனுபவம் கொண்டவர். அவர் பயிற்சியாளராக மாறிய பிறகு, தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியனுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் உதவி பயிற்சியாளராக முக்கிய பங்கு வகித்தார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு சீசன்களில் ஜெய்ப்பூரை வலுவான அணியாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்கள்.
இந்திய ரயில்வே அணிக்காக தாங்கள் விளையாடிய நாட்கள் முதல் தற்போது வரை இருவரும் மிகவும் இணக்கமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். சாதாரண வீரர்களை சாம்பியன் வீரர்கள் ஆக்குவதிலும், கோப்பை வெல்லாத அணிகள் அதனை முத்தமிடுவதிலும் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். அதனால், அவர்களின் கூட்டணி தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி வரலாற்றை மாற்றி எழுதவும், கோப்பை கனவை நோக்கி வழிநடத்தவும் இருவருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது.
இதேபோல், முந்தைய சீசன்களில் காயங்களுடன் போராடிய பவன் செஹ்ராவத் தனது சிறந்த ஃபார்மை மீண்டெடுக்க உறுதிபூண்டுள்ளார். அவர் கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடினார். பின்னர் துரதிர்ஷ்டவசமான காயத்தால் ஓரங்கட்டப்பட்டார். முன்னதாக, தலைவாஸ் அணிக்காக 9-வது சீசனில் (நவம்பர் 2022) குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் களமாடிய அவர் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். அத்துடன் தொடரில் இருந்தும் விலகினார். தனது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர், இந்த சீசனில் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அச்சுறுத்தல்
தமிழ் தலைவாஸ் இந்த சீசனில் எப்படி கோலோச்சுகிறது என்பது பெரும்பாலும் நிதேஷ் குமார் மற்றும் கேப்டன் சாகர் ரத்தீ ஆகியோரின் ஃபார்மைப் பொறுத்தே அமையும். வலது கார்னரில் சாகரும் இடது கார்னரில் நிதேஷும் அணியின் அனுபவம் வாய்ந்த டிஃபென்டர்களாக உள்ளனர். 22 ஆட்டங்களில் 77 டேக்கிள் புள்ளிகளுடன், கடந்த சீசனில் நிதேஷ் அவர்களின் தனித்துவமான டிஃபென்டராக இருந்தார். அவர் சீசன் 11 இல் மூன்றாவது அதிக டேக்கிள் புள்ளிகளைப் பெற்றார். எனவே, இந்த சீசனிலும் அவர் தனது அற்புதமான ஃபார்மைத் தொடர வேண்டும். அதேநேரத்தில், கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய சாகர் மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கிறார். காயம் காரணமாக கடந்த சீசனின் பெரும்பகுதியை தவறவிட்ட அவர், 71 போட்டிகளில் 226 டேக்கிள் புள்ளிகளைக் குவித்துள்ளார்.
தமிழ் தலைவாஸ் அணிக்கு வீரர்களின் காயம் பெரிய தலைவலியாக இருக்கும் சூழலில், அதனை அவர்கள் சிறப்பாக சமாளிக்க வேண்டியது அவசியமாகும். அணியின் முன்னணி வீரர்களான சாகர் மற்றும் பவன் செஹ்ராவத் முந்தைய சீசன்களில் காயம் காரணமாக அவதியுற்றுள்ளனர். தவிர, அணியின் ரெய்டிங் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அர்ஜுன் தேஷ்வால் மற்றும் நரேந்தர் கண்டோலா போன்றவர்களுக்கு பெரும் அழுத்தம் கொடுக்கக்கூடும். இந்தத் தடைகளை தகர்த்து தமிழ் தலைவாஸ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.