11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) போட்டி இன்று வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் ஐதராபாத் மண்ணில் தொடங்கி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் நாளை சனிக்கிழமை அரங்கேறும் ஆட்டத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, அதன் தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
புரோ கபடி தொடருக்கான 5வது சீசனில் 2017 ஆம் ஆண்டில் களம் கண்ட தமிழ் தலைவாஸ் அணி, பெரும்பாலும் எல்லா சீசன்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்தது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தமிழ் தலைவாஸ் எல்லா சீசன்களிலும் கடைசி 5 இடங்களுக்குள் தொடரை முடித்து வந்தது. ஆனால், 2022-ல் நடந்த 9-வது சீசனில் பழைய கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
அந்த சீசனில் டாப் வீரரான பவன் செஹ்ராவத் தொடக்க ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலே வெளியேறி, தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறினார். இதன்பிறகு முக்கிய வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. ஆனாலும், தமிழ் தலைவாஸ் வெற்றி மேல் வெற்றிகளை ருசித்து தொடரில் விறுவிறுவென முன்னேறியது. அரைஇறுதிக்கு முன்னேறிய அணி இறுதிப் போட்டிக்கும் சென்று மேலும் ஒரு வரலாறுச் சாதனையை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் தோல்வி பெரும் சரிவு கொடுத்தது.
இந்த தோல்வியின் வடுக்கள் கடந்த சீசனிலும் தென்பட்டதோ என்னவோ, 22 போட்டிகளில் களமாடிய தமிழ் தலைவாஸ் 9 வெற்றிகள், 13 தோல்விகளுடன் பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த சூழலில், நடப்பு ஆண்டின் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக ஏலக் களத்தில் புகுந்த தமிழ் தலைவாஸ் சச்சின் தன்வார், ஈரானிய ஆல்ரவுண்டரான சஃபாகி போன்ற முக்கிய வீரர்களை வசப்படுத்தியது. இதேபோல், அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுக்கு புத்துயிர் கொடுக்க புதிய பயிற்சியாளர்களை நியமித்தது.
புரோ கபடி தொடரில் களமாடி வரும் அணிகள், பொதுவாக தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் என்கிற பதவிகள் அடிப்படையில் நியமனம் செய்யும் ஆனால், இந்த தொடர் வரலாற்றில் முதன்முறையாக, அணியை மேம்படுத்தவும், கூட்டாக வழிநடத்தவும் இரட்டை பயிற்சியாளர் முறையை தமிழ் தலைவாஸ் அணி தேர்வு செய்துள்ளது. அதன்படி, தலைமைப் பயிற்சியாளராக உதய குமாரையும், வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனையும் நியமித்துள்ளதாக தமிழ் தலைவாஸ் கடந்த ஜூலையில் அறிவித்தது.
கபடி ஆடுவதில் ஏராளமான அனுபவங்களை தன்னக்கத்தே கொண்டுள்ள பயிற்சியாளர் உதய குமார், வீரர்களை மேம்படுத்துவதில் கை சேர்ந்தவராக அறியப்படுகிறார். வீரர்கள் மேம்பாடு மற்றும் அணியின் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுடன் அவர் உள்ளார். அவரின் நிபுணத்துவம் இளம் வீரரர்களை மேம்படுத்துவதிலும், அணியை மேலும் வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர் உதய குமார் 2002, 2006, மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கபடி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
முன்னாள் புரோ கபடி வீரரான வியூக பயிற்சியாளர் தர்மராஜ் சேரலாதன், அவரது வியூக புத்திசாலித்தனம் மற்றும் களத்தில் அதனை கொண்டுவரும் திறமைக்கு பெயர் பெற்றவர். பாட்னா பைரேட்ஸ் சீசன் 4 பி.கே.எல் வெற்றியின் முக்கிய வீரராக செயல்பட்ட சேரலாதன், 2016 கபடி உலகக் கோப்பையை வென்று, 2017 தெற்காசிய விளையாட்டு மற்றும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்று தமிழகத்தின் மட்டுமல்ல இந்தியாவின் கபடி நட்சத்திரமாகவும் ஜொலிக்கிறார்.
தற்போது சீனியர் நேஷனல்ஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய ரயில்வே அணியின் தலைமைப் பயிற்சியாளராக சேரலாதன் பணியாற்றி வருகிறது. தற்போது அவர் தமிழ் தலைவாஸின் போட்டி உத்திகள் மற்றும் ஆட்டத்தில் முடிவெடுப்பதில் கவனம் செலுத்துவதில் களமாடியுள்ளார்.
தமிழ் தலைவாஸ் அணியை வழிநடத்துவது குறித்து அவர் பேசுகையில், “நாங்கள் கபடியின் பிறப்பிடமாக இருப்பதால், விளையாட்டின் மீது எங்களுக்கு ஆழ்ந்த கடமை உள்ளது. இந்த ஆண்டு வலுவான மீண்டு வருவோம் என்று நான் நம்புகிறேன். நாங்கள் புதுமையான யுக்திகளை அறிமுகப்படுத்தி வருகிறோம், மேலும் இந்த சீசனில் எங்களின் முழு முயற்சியை வழங்க உறுதிபூண்டுள்ளோம்.” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணியை வழிநடத்துவது குறித்து தலைமை பயிற்சியாளர் உதய குமார் பேசுகையில், “நுணுக்கமாக மறுசீரமைக்கப்பட்ட அணியாக தமிழ் தலைவாஸ் உள்ளது. பலப்படுத்தப்பட்ட தற்காப்புத் திறன்கள் மற்றும் துல்லியமான தாக்குதல் மூலோபாயம் ஆகியவற்றுடன், சீசன் 11 சாம்பியன்ஷிப்பில் நாங்கள் எங்கள் பார்வையை அமைக்கிறோம்.
ஒருங்கிணைந்த அணியை செயல்படுத்துவதன் மூலம், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். முன்னணி வீரர்கள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, புதிய, இளம் மற்றும் திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“