11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
நடப்பு சீசனை அதிரடியான வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி, வரிசையாக 3 போட்டிகளில் தோல்வியுற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு டிரா என 22 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியல் 10-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில் நொய்டா உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று சனிக்கிழமை (நவ.16) தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 46-31 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விஷால் சாஹல் 12 புள்ளிகள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி 5 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தோல்வியை சந்தித்த பெங்கால் வாரியர்ஸ் அணி 23 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் பெங்கால் வாரியர்ஸ் தமிழ் தலைவாஸை 14 முறை எதிர்கொண்டுள்ளார். இதில், பெங்கால் வாரியர்ஸ் அணி 10 முறையும், தமிழ் தலைவாஸ் அணி 3 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது.
பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையே நடந்த முந்தைய போட்டியில் 74-37 என்கிற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
தபாங் டெல்லி வெற்றி
இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய தபாங் டெல்லி அணி, 35-25 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“