புரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி பல கனவுகளுடன் களமிறங்கியது என்று யாராவது சொன்னால், அவரை கோபமாக முறைத்து பார்த்துவிட்டு அப்படியே திரும்பி வந்துவிடுங்கள்.
Advertisment
நான் சிங்க், கொலாப்ஸ், ஓவர் கான்ஃபிடன்ஸ், ஃபெயிலியர் ஆஃப் கேப்டன்ஷிப் அண்ட் கோச் என்று ஆங்கிலத்தில் என்னவேண்டுமானாலும் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நிலைமை புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.
18 போட்டிகளில் 12 தோல்விகள், 3 வெற்றி, 3 டிரா. மொத்த புள்ளிகள் 30.
எல்லாம் கையை விட்டுச் சென்றுவிட்டது. வலிமையில்லாத கனவுகள் கரைந்துவிட்டது. ரசிகர்களின் கடைசி துளி நம்பிக்கையும் சிதைந்து விட்டது. இத்தனைக்கும் காரணம் என்னவென்று, இந்த புரோ கபடி லீக் தொடர் முடிந்த பிறகு நாம் நிச்சயம் விரிவாக பேசுவோம்.
அதற்கு முன்பாக மீதமுள்ள போட்டிகளை தமிழ் தலைவாஸ் முடிக்கட்டும்.
இந்நிலையில், தாவ் தேவிலால் விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தலைவாஸ் களமிறங்கியது. அதில், 50-21 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் மெகா வெற்றிப் பெற்றது.
இதற்கு முன் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் கூட, 'இன்றாவது ஆறுதல் வெற்றிப் பெறுமா தமிழ் தலைவாஸ்?' என்றே தலைப்பிட்டு வந்தோம். இனி அப்படி வேண்டாம் என நினைக்கிறேன். தோற்கட்டும். தோல்வியின் கடைசி படியின் நின்றுக் கொண்டிருக்கிறோம். அடுத்தது பாதாளம் தான். வீழ்வோம்!