11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று புதன்கிழமை (அக்.30) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் அரங்கேறிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணி முன்னணி ரைடர்களான நரேந்தர் கண்டோலா மற்றும் சச்சின் தன்வார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் 18 - 14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ஆல் அவுட் எடுத்த தமிழ் தலைவாஸ், 12 புள்ளிகளில் முன்னிலை பெற்றது. இறுதியாக, ஆட்ட நேர முடிவில் 42 - 25 என்கிற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் தரப்பில் நரேந்தர் கண்டோலா 15 புள்ளிகளும், சாஹில் குலியா மற்றும் சச்சின் தலா 5 புள்ளிகளும் எடுத்தனர். குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் குமன் சிங் 7 புள்ளிகள் எடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“