Pro-kabaddi-league | tamil-thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில், 4-வது சுற்று போட்டிகள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள எஸ்.டி.ஏ.டி மல்டி பர்போஸ் இன்டோர் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாகர் ரதி தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 11-வது இடத்தில் உள்ளது. அதேசமயம், நீரஜ் குமார் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.
டிசம்பர் 17 அன்று யு மும்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் 33-46 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தனர். இதேபோல், அதே நாளில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் பாட்னா பைரேட்ஸ் 28-29 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.
இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இந்த ஆட்டத்தில் நுழைவதால் வெற்றிக்காக தீவிரமாக போராடுவார்கள். 4 ஆண்டுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப்பாதைக்கு மீண்டும் திரும்பும் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.
நேருக்கு நேர்
பி.கே.எல் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் 12 முறை பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில், பாட்னா பைரேட்ஸ் 6 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் டையில் முடிந்தது.
முந்தைய சீசனில் கடைசியாக தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 33-33 என டையில் முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“