Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்டன் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து, இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன்
நடப்பு தொடரில் தலைவாஸ் அணி 19 போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி, 11ல் தோல்வி என 45 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மறுபுறம், புனேரி பல்டன் 18 போட்டிகளில் 13ல் வெற்றி, 2ல் தோல்வி, 3ல் டிரா என 76 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
புனேரி பல்டன் அணியைப் பொறுத்தவரை, அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 2வது உள்ளதால் எளிதாக பிளே-ஆஃப்-க்குள் நுழைந்து விடும். அதேவேளையில், தமிழ் தலைவாஸ் அணிக்கு பிளே-ஆஃப்-க்குள் நுழையும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதனால், தமிழ் தலைவாஸ் இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற நினைக்கும்.
மேலும், இந்த சீசனில் புனேரி பல்டனுக்கு எதிரான ஆட்டத்தில் 29-26 என 3 பபுள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றதால் அதற்கு பதிலடி கொடுக்க முயலும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு ஆதிக்கம் செலுத்த புனேரி பல்டன் தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“