Pro Kabaddi League 2022-23 : UP Yoddhas vs Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும், மற்ற நான்கு அணிகள் எலிமினேட்டரில் போட்டியிடும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியில் போட்டியிடுவார்கள்.
இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு மைதானத்தில் இன்று (டிசம்பர் 7 ஆம் தேதி) இரவு 8:30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோதாஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
We are ready for a #FantasticPanga! #CHEvUP | #IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #VivoProKabaddi pic.twitter.com/ouVALHlHcA
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 7, 2022
உ.பி.யோதாஸ் அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸிடம் தோல்வியடைந்த கையுடன் வருகிறது. மறுபுறம், தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அபார வெற்றியைப் பதிவு செய்த உத்வேகத்துடன் களமாடுகிறது. அந்த போட்டியில் அஜிங்க்யா பவார் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 புள்ளிகளைப் பெற்றார். எனவே, உ.பி. யோதாஸ் எதிராகவும் அவர் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
நடப்பு சீசனில் தற்போது புள்ளிப்பட்டியலில் முன்னேறி இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 66 புள்ளிகளுடன் உ.பி.யோதாஸ் 4வது இடத்திலும், 61 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் 5வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே ஐந்து புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ள நிலையில், எந்த அணியின் கை இன்றைய ஆட்டத்தில் ஓங்கும் என்பதைக் காண சுவாரசியமாக இருக்கும்.
தவிர, அக்டோபர் 23-ம் தேதி உ.பி.யோதாஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் 41-24 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி யோதாஸ் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் தமிழ் தலைவாஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உ.பி யோதாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. 43-28 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் வென்றுள்ளது. ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தது. தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர் அற்புதமாக விளையாடி ரெய்டு புள்ளிகளைக் குவித்தார். அவர் 8 ரெய்டு புள்ளிகளையும் 2 போனஸ் புள்ளிகளையும் பெற்றார். அஜிங்கியா பவர் 4 ரெய்டு புள்ளிகளையும், 4 போனஸ் புள்ளிகளையும் பெற்று அசத்தினார். அர்பித் 4 டேக்கிள் புள்ளிகளையும், அபிஷேக் 3 டேக்கிள் புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்தனர். ஹிமான்ஷூ மற்றும் மோகித் தலா 2 டேக்கிள் புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்தனர்.
உ.பி யோதாஸ் அணியில் துர்கேஷ் 6 ரெய்டு புள்ளிகளையும் 1 போனஸ் புள்ளிகளையும் பெற்றார். அணில் குமார் 4 ரெய்டு புள்ளிகளையும், 1 போனஸ் புள்ளிகளையும் பெற்றார். குர்தீப் 3 டேக்கிள் புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்.
இந்த வெற்றி மூலம் கடந்த முறை உ.பி யோதாஸிடம் தோற்றதற்கு தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil