Tamil Thalaivas vs UP Yoddha Match Preview: தமிழ் தலைவாஸ் vs யுபி யோத்தா : புரோ கபடி தொடரில், நேற்று நடந்த முதல் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக வென்றது.
ரசிகர்களுக்கு ஆச்சர்யமான விஷயமே, தலைவாஸ் ஆடிய டேக்கில்ஸ் தான். கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழ் தலைவாஸ் அணி அறிமுகம் ஆன போது, டேக்கில் செய்வதில் தான் தடுமாறினார்கள். ஆனால், நேற்றைய ஆட்டத்தில், முதல் பாதிக்கு முன்னதாகவே இரண்டு முறை பாட்னா அணியை ஆல் அவுட் செய்தனர் தலைவாஸ்.
இதனால், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் மிரண்டே போனது.
ரெய்டை பொறுத்தவரை, கேப்டன் அஜய் தாகூர் நேற்று அபாரமாக செயல்பட்டார். 18 முறை ரெய்டு சென்ற அஜய், அதில் 14 புள்ளிகள் பெற்றார். பர்தீப் நார்வால் ரெய்டு மூலம் 11 புள்ளிகள் எடுத்தாலும், 4 முறை அவுட் ஆனது சற்று பின்னடைவான விஷயமே.
மற்றபடி, நாம் முன்பு சொன்னது போல டேக்கில்களில் தலைவாஸ் அசத்தினர். முதல் பாதியில் 26-8 என்ற புள்ளி கணக்கில் முரட்டுத் தனமாக தலைவாஸ் முன்னிலை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே, பாட்னா எப்படி வெளிறி போயிருக்கும் என்பதை நீங்கள் கெஸ் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், இன்று தமிழ் தலைவாஸ் அணி யுபி யோத்தா அணியை சென்னையில் எதிர்கொள்கிறது. பாட்னாவுக்கு எதிராக சிறப்பாக ஆடியதால், இன்றைய போட்டியில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
தமிழ் தலைவாஸ் அணி: அஜய் தாகூர்(கேப்டன்), சுரிந்தர் சிங், ஜஸ்விர் சிங், மன்ஜீத் சில்லர், தர்ஷன், சி அருண், அமித் ஹூடா.
யுபி யோத்தா அணி: ரிஷன்க் தேவடிகா (கேப்டன்), பிரஷாந்த் குமார் ராய், ஸ்ரீகாந்த் ஜாதவ், ஜீவா குமார், நிதேஷ் குமார், சாகர் பி கிருஷ்ணா, சச்சின் குமார்.
யுபி யோத்தா அணியை பொறுத்தவரை ரெய்டர்களான ரிஷன்க் தேவடிகா, பிரஷாந்த் குமார் ராய் ஆகியோர் அதிக விலை கொடுத்து இந்த சீசனில் வாங்கப்பட்டுள்ளனர். டாப் ரெய்டர்களான இவ்விருவரும், தமிழ் தலைவாஸுக்கு இன்று செம டஃப் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு எட்டு மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கும் இந்தப் போட்டியை, Star Sports 2 and Star Sports 2 HD சேனலில் கண்டுகளிக்கலாம். இரவு 7.30 மணி முதல் லைவ் ஆரம்பமாகிவிடும்.
ஆன்லைனில், ஹாட்ஸ்டார் சேனலில் இந்த போட்டியை நேரடியாக காணலாம்.