/indian-express-tamil/media/media_files/2025/09/22/tamil-thalaivas-vs-up-yoddhas-pkl-season-12-match-46-updates-tamil-news-2025-09-22-17-39-08.jpg)
தமிழ் தலைவாஸ் vs உ.பி யோதாஸ் பி.கே.எல் சீசன் 12 போட்டி 46.
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெற்ற 46-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோதாஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் 10 நிமிடம் முடிவில் தமிழ் தலைவாஸ் - உபி யோதாஸ் அணிகள் 7 - 7 என புள்ளிகள் எடுத்து சம நிலையில் இருந்தன. ரைடிங்கில் படுமோசமாக சொதப்பினாலும், டிஃபென்ஸில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். குறிப்பாக நிதேஷ் குமார் 5 புள்ளிகளை எடுத்து அசத்தினார். கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் ஒரு புள்ளி மட்டுமே எடுத்தார். ரைடில் நரேந்தர் கண்டோலா அடுத்தடுத்த சென்ற போது, ஒரு புள்ளியைக் கூட எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். முதல் பாதி முடிவில் உ.பி யோதாஸ் அணிகள் 15 - 10 என்கிற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடந்த 2-ம் பாதியில் ஆல்-அவுட் நிகழ்த்த விடாமல் தமிழ் தலைவாஸ் வீரர்கள் போராடினார். ஆனாலும், ஆட்டத்தின் 16:04-வது நிமிடத்தில் உ.பி யோதாஸ் தமிழ் தலைவாஸை ஆல் -அவுட் எடுத்து மிரட்டியது. அடுத்தடுத்து ரைடு வந்த அர்ஜுன் தேஷ்வால் மற்றும் நரேந்தர் கண்டோலாவை ஈஸியாக டேக்கிள் செய்து கலக்கினர். இதனால், ஆட்டத்தின் 13:07-வது நிமிடத்தில் உ.பி யோதாஸ் 23 - 13 என்கிற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. உ.பி யோதாஸின் பவானி ராஜ்புத், ககன் கௌடா சிறப்பாக ரைடிங் செய்து மாறி மாறி புள்ளிகளை அள்ளினர். இந்த நேரத்தில் அவர்கள் இருவரும் தலா 5 புள்ளிகளை எடுத்து அசத்தினர்.
முதல் 10 நிமிடத்தில் இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில், அடுத்த 10 நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் மிஞ்சிய உ.பி யோதாஸ் 8 புள்ளிகள் முன்னிலை பெற்றது. அடுத்த 10 நிமிடத்தில் 11 புள்ளிகள் முன்னிலை எடுத்து மிரட்டியது. ஆட்டத்தில் மீதம் 8:47 நிமிடம் இருக்க, 2-வது ஆல்-அவுட்டை எடுத்து அசத்தியது உ.பி யோதாஸ். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் முதல் புள்ளியை எடுத்த கேப்டன் அர்ஜுன் தேஷ்வால், கிட்டத்தட்ட 32 நிமிடங்களுக்கு பிறகு தான் அடுத்த புள்ளியை எடுத்தார். டிஃபென்ஸில் புள்ளிகளை எடுத்தாலும் ரைடிங்கில் புள்ளி எடுக்க தமிழ் தலைவாஸ் வீரர்கள் திணறினர். மொயின் ஷஃபாகி 3 புள்ளிகளை எடுத்து ஆறுதல் அளித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் 39 - 22 என்கிற புள்ளிகள் கணக்கில் உ.பி யோதாஸ் தமிழ் தலைவாஸை வீழ்த்தி அசத்தியது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோதாஸ் அணிகள் அணிகள் இதுவரை 17 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் வென்றுள்ளது. அதேநேரத்தில் உ.பி யோதாஸ் 6 போட்டிளில் வென்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்தது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் 4-ல் வென்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.