விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேரம் விளையாட்டு வீரர்களுக்கு ஏழு வருடங்களாக இல்லாத முக்கியத்துவத்தை கொடுத்திருப்பதாக உலக சாம்பியன் வீராங்கனை மித்ரா நிகழ்ச்சிகரமாக பேசினார்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உலக கேரம் சாம்பியன்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வேலம்மாள் அகாடமி சார்பில், உலக கேரம் சாம்பியன் காசிமா, மித்ரா மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு பெற்றோருடன் சேர்த்து மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மூன்று கேரம் சாம்பியங்களுக்கும் தலா ரூபாய் 15 லட்சம் என மொத்தம் 45 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
அவர்களுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளரான மரியா இருதயம் என்பவருக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. பின்னர் விழா மேடையில் பேசிய உலக சாம்பியன் காசிமா, ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும் அதை கண்டுபிடிங்கள். படிப்பையும் விளையாட்டையும் சமமாக வையுங்கள் இரண்டுமே உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். கேரம் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை.அரசு தரப்பிலும் பல உதவிகள் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்..
தொடர்ந்து பேசிய கேரம் சாம்பியன் மித்ரா, உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக வந்த பிறகு விளையாட்டு வீரர்களுக்கான முக்கியத்துவம் மிகச்சிறப்பாக உள்ளது. முதல் முறையாக கேரம் வீரர்களுக்கும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 7 வருடமாக கேரம் விளையாடி வருகிறேன் ஆனால் தற்போது கிடைக்கும் உதவி போல் எப்போதும் கிடைத்ததில்லை என நெகிழ்ச்சியாக பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“