தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையம், முதல் முறையாக ஜனநாயக கடமையை ஆற்ற உள்ள இளம் வாக்காளர்களை, தங்கள் கடமைகளைத் தேர்தல் நாளன்று தவறாமல் செலுத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றது. விழிப்புணர்வு பிரச்சாரத்தை பொதுவெளியிலும், இணைய பக்கங்களிலும் தொடர போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதோடு பிரபலங்களை கொண்டும், சினிமா நட்சத்திரங்களை கொண்டும், பேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்து இருந்தது.
இதையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரை தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வாஷிங்டன் சுந்தர், ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிதன் மூலம் பலரது கவனத்தையும் பெற்று இருந்தார்.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, இளம் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளார். இணைய பக்கங்கள் மூலமாக தொடங்கவுள்ள இந்த பிரச்சாரத்தில் 10,0000 மாணவர்களுக்கு மேல் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகின்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil