2023 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், கோவை அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
தமிழகத்தில் நடத்தப்படும் மிகபெரிய கிரிக்கெட் தொடரான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 12-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் லீக் சுற்றுகளின் முடிவில், கோவை, மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 அணிகள் ப்ளே அப் சுற்றுக்கு முன்னேறியது.
இதில் முதல் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்திய கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், மதுரை அணியை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு தகுதி பெற்ற நெல்லை அணி, திண்டுக்கல் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து இன்று நெல்லை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோவை – நெல்லை அணிகள் மோதுகின்றன.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுரேஷ்குமார் 33 பந்துகளில் 57 ரன்களும், முகிலேஷ் 40 பந்துகளில் 51 ரன்களும், ரஹ்மான் 21 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர். நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ், வாரியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மோகன் பிரசாத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
206- ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 15 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில், அருண் கார்த்திக் 27 ரன்களும், சூர்யபிரகாஷ் 22 ரன்களும், பொய்யாமொழி 19 ரன்களும், ராஜகோபால் 13 ரன்களும் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
கோவை அணி தரப்பில் கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டுகளும், ஜகடீவ் 4 விக்கெட்டுகளும், கவுதம், சித்தார்த், முகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“