கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. சென்னை, திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, கோவை, ஈரோடு என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500- க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஜூனியர் மற்றும் சீனியர் என பிரிவுகளில் "ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன.
முதல் நாளில் சுமார் நூறு பேர் பங்கேற்ற நிலையில், வீரர், வீராங்கனைகள் வாளை ஆவேசமாக சுழற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கருணாமூர்த்தி மற்றும் தியாகு நாகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“