ஐபிஎல் 2019 தொடரில், இன்று (மே.7) இரவு 7.30 மணிக்கு சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஏற்கனவே லீக் தொடரில், இரண்டு முறை மும்பையிடம் சென்னை செமத்தியாக வாங்கிக் கட்டியிருக்கும் நிலையில், இன்றைய குவாலிஃபயர் ஆட்டத்திலாவது மும்பையை சென்னை வீழ்த்துமா என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சட்டென்று மாறியது வானிலை!.
ஆம்! மதியத்துக்கு மேல் சென்னையில் மேக மூட்டங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மாலைக்கு மேல் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இதனால், திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக தளங்களில் 'ரெயின் ரெயின் கோ அவே, கம் அகெய்ன் அனதர் டே' என்று 2ம் வகுப்பு பிள்ளைகள் போட ரைம்ஸ் பாடத் துவங்கிவிட்டனர்.
ஏற்கனவே, ஃபனி புயல் தமிழகத்திற்கு வராத காரணத்தால் போதுமான மழை நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. சென்னையில் உள்ள அனைத்து ஏரியிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 99% தண்ணீர் வற்றிவிட்டது. சென்னையே குடிநீர் பஞ்சத்தில் தவிக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மழையே வாலண்டரியாக வரும் போது, முக்கியமான கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் "ரெய்ன் ரெய்ன் கோ அவே போன்ற கமெண்ட்ஸ்களை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. மழை முக்கியம் இல்ல போல... மேட்ச் தான் வேணும் போல" என்று குறிப்பிட்டுள்ளார்.