செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10ம் தேதி முதல் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளை வென்ற தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறி இருந்தது. காலிறுதிப் போட்டியில் தமிழக அணியும் இமாச்சல பிரதேச அணியும் மோதிக்கொண்டன, அதில் தமிழக அணி வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. பின்னர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று மாலை பரோடா அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது தமிழக அணி.
முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்திருந்தது. அந்த அணியில் விஷ்ணு சோலங்கி அதிகபட்ச்சமாக 49 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த், நாராயண் ஜெகதீசன் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இவர்களின் விக்கெட்டுகளுக்குப் பின்னர் களமிறங்கிய பாபா அபராஜித் மற்றும் ஷாரு கான் ஜோடி 18 ஓவர்களிலே நிர்ணயித்த இலக்கை அடைந்தது. போட்டியின் சிறந்த வீராக தமிழக அணியின் வேகப் பந்து வீச்சாளர் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் கர்நாடக அணியிடம் தோல்வியுற்று இருந்த தமிழக அணி இந்த முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். போட்டியை வென்ற குஷியில், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கமிங்' பாடலுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அணியினர் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். இந்த கோப்பையை 14 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அணி வென்றுள்ளது குறிப்பிடத் தக்க ஒன்று.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil