இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பை டுவென்டி20 தொடர் வரை இவர் அணியின் பயிற்சியாளர் ஆக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உள்ளிட்டோரின் பதவிக்காலம், கடந்த உலககோப்பை தொடருடன் நிறைவடைந்தது. இந்திய அணி, உடனடியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க வேண்டி இருந்ததால், அவர்களின் பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், மைக் ஹெசன் டாம் மூடி உள்ளிட்டோர், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் ஒருவரை தேர்வு செய்வதற்காக கபில்தேவ் தலைமையில் அஞ்சுமன் கெய்க்வாட், இந்திய பெண்கள் அணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய ஆலோசனைக்குழு, மும்பையில் கூடி, நேர்காணல் நடத்தியது.
ரவி சாஸ்திரி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ளதால், அவர் ஸ்கைப் மூலம், நேர்காணலில் பங்கேற்றார். ராஜ்புட், ஹெசன் மற்றும் ராபின் சிங், நேரில் கலந்துகொண்டனர். நேர்காணல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ரவி சாஸ்திரி முதலாவதாகவும், ஹெசன் இரண்டாவதாகவும், டாம் மூடி மூன்றாவதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.