11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) போட்டி ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்தப் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும், 3-வது கட்ட ஆட்டங்கள் புனேயிலும் நடக்கிறது.
புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
தெலுங்கு டைட்டன்ஸ் vs பெங்களூரு புல்ஸ் மோதல்
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த தொடக்க ஆட்டங்களில் பவன் செஹ்ராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் - பர்தீப் நர்வால் தலைமையிலான பெங்களுரூ புல்ஸ் அணிகள் மோதின
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 37 - 29 என்கிற புள்ளிகள் கணக்கில் பெங்களுரூ புல்ஸ் அணியை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி தரப்பில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பவன் செஹ்ராவத் 13 புள்ளிகளை அள்ளினார்.
நேருக்கு நேர்
பி.கே.எல் தொடர் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் 23 முறை பெங்களூரு புல்ஸை எதிர்கொண்டுள்ளது. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 16 வெற்றிகளுடன், பெங்களூரு புல்ஸ் அணி நேருக்கு நேர் சாதனை படைத்துள்ளது. பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக தெலுங்கு டைட்டன்ஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது, 4 போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“