11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று சனிக்கிழமை (அக்.25) இரவு 9 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் அரங்கேறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி கே.சி அணிகள் மோதவுள்ளன.
நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கிய பவன் செஹ்ராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றது. அந்த அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக 22-52 என்கிற புள்ளிகள் கணக்கில் படுதோல்வியடைந்தது. மறுபுறம், இதுவரை ஆடிய 2 போட்டியில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என பெற்றுள்ளது தபாங் டெல்லி. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் உ.பி யோதாஸுக்கு எதிராக 23-28 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
தோல்விக்குப் பின் களமாடும் இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும். குறிப்பாக, கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துடன் நிறைவு செய்த தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெறுவது அவசியமாகும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தபாங் டெல்லி கே.சி அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், தபாங் டெல்லி கே.சி. அணி 9 முறையும், தெலுங்கு டைட்டன்ஸ் 8 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது.
இந்த அணிகளுக்கு இடையே கடைசியாக நடந்த போட்டியில், தபாங் டெல்லி கே.சி. அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 44-33 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“