11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று (அக். 22) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்க செலுத்திய ஜெய்ப்பூர் அணி, எதிர் அணியான தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தெறிக்கவிட்டது. ஆட்ட நேர முடிவில், ஜெய்பூர் அணி 52 - 22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய தெலுங்கு டைட்டன்ஸ், அக்டோபர் 19 அன்று தமிழ் தலைவாஸுக்கு எதிராக நடந்த போட்டியில் 29-44 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர தெலுங்கு டைட்டன்ஸ் போராடும். மறுபுறம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், அக்டோபர் 20 அன்று பெங்கால் வாரியர்ஸை 39-34 என்ற கணக்கில் தோற்கடித்த உற்சாகத்தில் களமிறங்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் தொடர் வரலாற்றில், தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் 19 முறை மோதியுள்ளன. இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 முறை வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 8 முறை வெற்றி பெற்று திரும்பியுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.
கடைசியாக தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 51-44 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“