Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அதில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
ஹரியானாவை வீழ்த்திய டெல்லி
இன்றைய முதல் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் டெல்லி தபாங் அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மோதிக் கொண்டன. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்று வந்தன. இருப்பினும் முடிவில் டெல்லி அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணியை வீழ்த்தியது.
டெல்லி அணி 35 புள்ளிகளையும், ஹரியானா அணி 32 புள்ளிகளையும் எடுத்தன. டெல்லி அணியில் அதிகபட்சமாக அஷூ மாலிக் 14 புள்ளிகளை எடுத்தார். ஹரியானா தரப்பில் அதிகபட்சமாக சித்தார்த் 11 புள்ளிகளை எடுத்தார்.
தெலுங்கு டைட்டன்ஸை பந்தாடிய தமிழ் தலைவாஸ்
இன்றைய இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் 20 – 11 என முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை இரண்டாம் பாதியிலும் தொடர்ந்தது. பவன் ஷெராவத் சிறப்பாக ஆடினாலும் தெலுங்கு டைட்டன்ஸால் மீள முடியவில்லை. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் அணி 54 புள்ளிகளை பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் 29 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக அஜிங்கியா 11 புள்ளிகளையும் நரேந்தர் 10 புள்ளிகளையும் எடுத்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் பவன் ஷெராவத் 10 புள்ளிகளை எடுத்தார்.
தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்
நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5ல் வெற்றி, 9ல் தோல்வி என 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் 2ல் வெற்றி, 13ல் தோல்வி அடைந்து 16 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளது.
ஜனவரி 22 அன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் இந்தப் போட்டியில் களமிறங்கியது. அந்த ஆட்டத்தில் 30-37 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மறுபுறம், தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் ஜனவரி 21 அன்று பெங்களூரு புல்ஸை 45-28 என்ற கணக்கில் அபாரமாக தோற்கடித்தது.
நேருக்கு நேர்
பி.கே.எல் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் 13 முறை தமிழ் தலைவாஸை எதிர்கொண்டுள்ளது. அதில் தமிழ் தலைவாஸ் 7 முறை வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது, தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.
தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் 38-36 என்கிற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.