/tamil-ie/media/media_files/uploads/2022/02/Sports.jpg)
விராட் கோலியின் நன்றாக விளையாடுகிறார் - பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர்
இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் நிலை குறித்து கவலையில்லை. அவர் நன்றாக விளையாடுகிறார் என்று பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (இரவு 7.30 மணி) நடக்கிறது.
இதையொட்டி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நேற்று காணொளி வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய வீரர் விராட் கோலி கடந்த ஆண்டு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்தார். இப்போது அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டு ரன் எடுக்க தடுமாறுவதாக நான் நினைக்கவில்லை. இதை குறிப்பிட்டு அது குறித்து நான் கோலியிடம் விவாதிக்கவில்லை.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவருக்கு மோசமானதாக அமைந்தது உண்மை தான். ஆனால் அவர் வலை பயிற்சியில் நன்றாகவே பேட்டிங் செய்கிறார். போட்டிக்கு அவர் தயாராகி வரும் விதத்தை பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் அவர் ரன் குவிப்பார் என்று நம்புகிறேன். அவரது பார்ம் குறித்து கவலைப்பட எதுவும் இல்லை.
அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. அங்குள்ள சூழலில் நன்றாக செயல்படும் திறமை நமது பேட்ஸ்மேன்களிடம் இருக்கிறது என்றார் ரத்தோர்.
பெங்களூரில் புதிய மைதானம்
கர்நாடக மாநிலம், பெங்களூரில் கூடுதல் வசதிகளுடன் புதிய கிரிக்கெட் அகாடெமி அமைக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிறுவிய தேசிய கிரிக்கெட் அகாடெமி 2000-ம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதான வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இளம் வீரர்களுக்கு பயிற்சி மற்றும் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை அளிப்பது தேசிய கிரிக்கெட் அகாடெமியின் பிரதான பணியாகும்.
இந்த நிலையில் கூடுதல் வசதி வாய்ப்புகளுடன் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் தேவனஹள்ளி என்ற இடத்தில் 40 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலத்தை கிரிக்கெட் வாரியம் 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றுள்ளது.
புதிய அகாடமிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
The new National cricket Academy @bcci pic.twitter.com/fVWMOxev5g
— Sourav Ganguly (@SGanguly99) February 14, 2022
இதில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, தேசிய அகாடெமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ அணி தன்னுடைய 7-ஆவது வெற்றியை பெற்றது.
இந்த ஆட்டத்தில் கேரளா அணி சார்பில் இனெஸ் சிபோவிக் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் கோவா-மோகன் பாகன் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
2-வது மகளிர் ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது
இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலிராஜ் 66 ரன்களும், ரைகா கோஸ் 65 ரன்களும் குவித்தனர்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர் எஸ்.டிவைன் அதிகபட்சமாக 2 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், எமிலியா கெர்ரின் சதத்தால் (119) அந்த அணி 49 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 119 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவிய எமிலியா கெர் ஆட்டநாயகி விருதை பெற்றுக் கொண்டார்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு;
முதலிடத்தில் நீடிக்கும் ஜோகோவிச்
ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கான உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ரஷியாவின் டேனில் மெட்வடேவ் உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், அடுத்த வாரம் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றால் மெத்வதேவ் முதலிடத்துக்கு முன்னேறி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.