இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சொந்தமான நொய்டா செக்டர் 104 வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகேந்திர சிங் தோனி, தற்போது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இத்தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தோனிக்கு உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும் வீடு உள்ளது. இந்த வீட்டை, தோனி, விக்ரம் சிங் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். வீடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், விக்ரம் சிங், அங்கிருந்து வெளியேறியிருந்த சமயம், வீட்டில் இருந்த எல்சிடி டிவி மாயமாகி உள்ளது.
இதுதொடர்பாக, விக்ரம் சிங், நொய்டா செக்டர் 39 போலீஸ் ஸ்டேசனில் புகாரளித்தார். எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிரசாந்த் கபில், விசாரணையை துவக்கியுள்ளார்.
வீடு பராமரிப்பு பணியில் இருந்தவர்களில் யாராவது ஒருவர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் பிரசாந்த் கபில் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளியை விரைவில் கைது செய்துவிடுவோம் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் தோனி, கடந்த சில போட்டிகளில் பங்கேற்காததால், கவலையில் இருந்த தோனி ரசிகர்களுக்கு, இந்த செய்தி, அவர்களுக்குமேலும் வருத்தத்தை அதிகரிக்க செய்வதாக அமைந்துள்ளது.