தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார், புரோ கபடி ஆரம்பித்ததில் இருந்து பங்கேற்று கலக்கி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மொத்தம் 56 ஆட்டங்களில் ஆடி, 88 பேரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க வைத்துள்ளார். டேக்கிள் மூலம் 99 புள்ளிகள் பெற்று எதிரணிக்கு சவாலாக விளங்குகிறார்.
இந்த ஆண்டு யு-மும்பா அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு தபாங் டெல்லி அணிக்காக ஆடினார்.
முப்பத்தி ஏழு வயதான சுரேஷ் குமார், தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்தவர். இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர். ஒன்பதாம் வகுப்பில் இருந்து கபடி விளையாட ஆரம்பித்துள்ளார். பின்னர் உள்ளூர் டீம்மில் பங்கேற்று, பக்கத்து ஊர்களில் சென்று விளையாட ஆரம்பித்தார். அதன் பின்னர் பள்ளி அணியிலும், கல்லூரி அணியிலும் இடம் பிடித்தார்.
கல்லூரியில் படிக்கும் போதே ஐசிஎஃப் அணிக்காக விளையாடினார். பி.ஏ பொருளாதாரம் முடித்ததும், சென்னை ஐசிஎஃப்-ல் கிரேட் ஒன் டெக்னிஷியனாக பணியில் சேர்ந்தார். ஐசிஎஃப் அணிக்காக மட்டுமல்லாது ரெயில்வே அணிக்காகவும் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு.
இந்திய கபடி அணியின் கேப்டன் அனுப் குமார் தலைமையிலான யு-மும்பா அணியில் விளையாடி வரும் இவர், ஹரியாணாவுக்கு எதிரான ஆட்டத்தில், வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் யு-மும்பை அணி 12 பாயிண்டுகளுடன் பின் தங்கியிருந்தது. ஹரியானா 19 புள்ளிகள் பெற்றிருந்தது. அந்த சமயத்தில் எதிரணியை மடக்கி பிடிக்கும் திறன் கொண்ட சுரேஷ் குமார், இரண்டு புள்ளிகளை அணிக்குப் பெற்றுத்தந்தார்.
இது போட்டியின் போக்கையே மாற்றியது. கடைசியில் 29க்கு 28 என்ற புள்ளிக் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் சுரேஷ் குமார், கேம் சேன்ஜராக உருவெடுத்துள்ளார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பரிசும் பதக்கமும் கிடைக்கும். ஆனால் புரோ கபடியில் நாங்கள் எடுத்த புள்ளிகள் சேமிக்கப்பட்டு வருகிறது. இது என்னைப் போன்ற வீரர்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது என்கிறார், சுரேஷ் குமார்.
புரோ கபடி போட்டி நிறைய கபடி வீரர்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளது. அதில் கிராமத்தில் இருந்து வந்த சுரேஷ் குமாரும் ஒருவர் என்பது தமிழகத்துக்குப் பெருமை.