தென் ஆப்பிரிக்காவில் 2015-16 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற டி20 ராம் ஸ்லாம் சேலஞ் கிரிக்கெட் தொடரில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவின் மூன்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களான தமி சோல்கிலே, லோன்வாபோ சோட்சோபே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் வாரியம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு 2016 ஆம் ஆண்டு முன்னாள் வீரர் எதி எம்பலாட்டி தொடர்பாக சில சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பதாக புகார்கள் வந்தபோது விசாரணை தொடங்கியது. மூன்று உள்ளூர் டி20 போட்டிகளின் முடிவுகளை பிக்சிங் செய்வதற்காக போடி பல வீரர்களைத் தொடர்பு கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, 2004 (PRECCA) சட்டத்தின் 15வது பிரிவின் கீழ் தமி சோல்கிலே, லோன்வாபோ சோட்சோபே ஆகிய இருவர் மீதும் ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் இருவரும் இன்று, நவம்பர் 29, 2024 அன்று பிரிட்டோரியா சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பொது அவர்களின் வழக்கு பிப்ரவரி 26, 2025-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
போட்டியின் முடிவை மாற்றுவதற்காக மூவரும் பரிசுகளை ஏற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எதி எம்பலாட்டி ஏற்கனவே பிரிட்டோரியா சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது வழக்கும் பிப்ரவரி 20, 2025-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, முன்னாள் வீரர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில், லோன்வாபோ சோட்சோபே மட்டுமே சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடியுள்ளனர். மற்ற இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“