தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித். சென்னையைச் சேர்ந்த இவர், தமிழக அணியில் இருந்து விலகி கேரள கிரிக்கெட் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். அவரது இந்த முடிவுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி சீசன் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கேரள கிரிக்கெட் சங்கம் அவரை அணுகியதை தொடர்ந்து, அவர் இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இனி வரும் தொடர்களில் அவர் கேரள அணிக்காக உள்நாட்டு தொடர்களில் விளையாட உள்ளார்.
30 வயதான ஆல்-ரவுண்டர் வீரர் பாபா அபராஜித் கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தார். தமிழக அணி பெற்ற வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதுவரை 90 முதல் தர கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4571 ரன்கள் எடுத்துள்ளார்
பாபா அபராஜித் 107 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 43 பேட்டிங் சராசரியுடன் உடன் 3869 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் முதல் தர போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளும், 107 லிஸ்ட் ஏ போட்டிகளில் 71 விக்கட்டுகளும், 63 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
தனது 17 வயது முதலே ரஞ்சி சீசனில் தமிழ்நாடு அணிக்காக விளையாட ஆரம்பித்த அபராஜித், தற்போது அவரது 30 வயது வரை விளையாடியுள்ளார். கடந்த ரஞ்சி சீசனில், தமிழ்நாட்டு அணியில் அவரது பெயர் இடம் பெறாத நிலையில், அவர் தற்போது கேரளா அணியில் இணைய உள்ளார். இதனிடையே, கேரள அணியில் ஆடி வந்த ஆல்ரவுண்டர் ஸ்ரேயாஸ் கோபால் அந்த அணியில் இருந்து விலகி கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“